நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது சுவிங்கம் சாப்பிட்ட இளைஞன் ஒருவரை 1000 ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறு திருகோணமலை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இதன்போது நீதிமன்றத்தை அவமதித்ததுடன் ஒழுக்கமற்ற விதத்தில் நடந்து கொண்டமைக்காக திருகோணமலை நீதிமன்ற பொலிஸாரினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றப்பத்திரம் திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம். எச். எம். ஹம்ஸா முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து சுவிங்கம் சாப்பிட்ட இளைஞனுக்கு தண்டம் செலுத்துமாறு கட்டளை பிறப்பித்தார்.
திருகோணமலை, மொரவெவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவருக்கே இவ்வாறு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நீதிமன்றத்தில் வழக்கிற்கு வருகின்றவர்களும், அவர்களது உறவினர்களும் நீதிமன்றத்தை மதித்து செயற்பட வேண்டும் எனவும் அவ்வாறு செயற்படாதவர்கள் மீது பொலிஸார் கடும் நடவடிக்கை எடுப்பதாக நீதவான் திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்தார்.