அந்தமானில் இருக்கும் ஆதிவாசி மக்கள், வெளியாட்கள் யார் வந்தாலும், அவர்கள் காட்டை அழிக்க வந்துள்ளார்கள் என்று நினைத்து கொள்வார்கள் எனவும், அதே சமயம் அவர்களால் வெளியுலகில் இருக்கும் நோய்களை எதிர்க்குமளவுக்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி இருக்காது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
அந்தமான் – நிகோபார் தீவுகளில் இருக்கும் ஆதிவாசிகள் வெளியுலகுடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.
அதில் ஒரு மக்கள் தான் செண்டினல் மக்கள். கடந்த 2004-ஆம் ஆண்டு அந்தமான் நிகோபார் தீவுகள் சுனாமியால் பாதிக்கப்பட்டபோது, இந்த மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்ப்பதற்காக மத்திய அரசு விமானத்தின் மூலம் அதிகாரிகளை அனுப்பியது.
ஆனால் போனா விமானம் அதே வேகத்தில் திரும்பியது. காரணம் செண்டினல் மக்கள் விமானத்தின் மீது அம்புகளை தொடர்ந்து வீசியதால், விமானம் திரும்பி வந்தது.
அதைத் தொடர்ந்து இந்த மக்களின் வாழ்வியலிலும் வாழ்விடங்களிலும் ஒருபோதும் தலையிடப்போவதில்லை எனக் 2005-ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.
அதுமட்டுமின்றி இந்த தீவுக்குள் யாரும் செல்லக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் அதற்கான தடை நீக்கப்பட்டது.
இருப்பினும் அந்தமான் நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்ற பின்னரே இந்தப் பகுதிகளுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியும்.
இந்நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்காவைச் சேர்ந்த மத போதகர் ஜான் ஆலன் என்ற இளைஞர் எந்தவித முன் அனுமதியும் பெறாமல், சட்டவிரோதமாக இந்த தீவுக்குள் உள்ளே நுழைய முற்பட்டு, அந்த மக்களால் கொலை செய்யப்பட்டார்.
ஏன் அந்தமானில் இருக்கும் இந்த மக்கள் வெளியுலக மக்களைக் கண்டால் வெறுக்கிறார்கள் என்ன காரணம் என்பது குறித்து மானுடவியல் பேராசிரியரும் தமிழர் மானுடவியல், தமிழகப் பழங்குடிகள் போன்ற நூல்களை எழுதியவருமான பக்தவத்சல பாரதி கூறுகையில், காட்டு வளங்களை அபகரிப்பதற்காகச் சென்று, அதைத் தடுக்க முயன்ற பல பழங்குடிகள் ஆங்கிலேயர் காலத்தில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
அதன் காரணமாகப் பழங்குடி மக்கள் பலர் இறந்துள்ளனர். வெளியில் இருந்து யார் வந்தாலும் அவர்களின் காட்டை அபகரித்துவிடுவார்கள் என்கிற அச்சம் அவர்களுக்கு எப்போதும் இருக்கும். அதன் காரணமாகத்தான் அவர்கள் அப்படி நடந்துகொள்கிறார்கள்
மேலும் அந்தமான் தீவில் வாழும் பல்வேறு பழங்குடி மக்கள் வெளி உலகத்துடன் நெருக்கமாக வந்துகொண்டிருக்கிறார்கள். சென்டினல்கள், ஜாரவா போன்ற பழங்குடி மக்கள்தான் இன்னும் தனித்துவத்துடன் வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து சென்டினல் மக்களுக்கு வெளியுலகில் இருக்கும் நோய்களை எதிர்க்குமளவுக்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி இருக்காது.
மற்றவர்களிடமிருந்து அவர்களுக்குத் தொற்றுநோய்கள் பரவக்கூடிய ஆபத்து இருக்கிறது, அதன் காரணமாகவே யாரும் செல்லக் கூடாது என்ற செய்தியும் வெளியானது.
இது குறித்து பிரபல தமிழ் ஊடகம் சென்னை மருத்துவக் கல்லூரியின் பொது மருத்துவத்துறைப் பேராசிரியர் ரகுநந்தனன்பேராசிரியர் ரகுநந்தனனிடம் கேட்டுள்ளது.
அதில், அவர் அங்கிருக்கும் மக்கள் நேரடியாக சுத்தமான காற்றை சுவாசிக்கிறார்கள். சூரியஒளி நேராக கிடைக்கிறது. சுத்தமான தண்ணீர், காட்டில் கிடைக்கும் பழங்கள் போன்றவைகள் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்கின்றனர்.
காட்டிலும் நோய்களை ஏற்படுத்தும் கிருமிகள் குறைவாகவே இருக்கும். வெளியில் இருந்து யாராவது உள்ளே செல்லும்போது செல்பவர்களிடமிருந்து அவர்களுக்குத் தொற்றுநோய்கள் பரவ வாய்ப்பிருக்கிறது.
நம்மைப் போன்று நோய்களுக்கான தடுப்பூசிகளும் அவர்கள் போட்டுக்கொண்டதில்லை. அதனால், மிகவிரைவாக நோய்கள் தாக்கிவிடும் என்பதால், அவர்களின் வாழ்க்கையை முறையை தெளிவாக தெரிந்து கொண்டே செல்வது நல்லது என்று குறிப்பிட்டுள்ளார்.