அந்தமான் ஆதிவாசிகளை நேருக்கு நேர் சந்தித்த மதுமாலா: சில்லிட வைக்கும் அனுபவம்

வெளியாட்கள் செல்ல அச்சப்படும் சென்டினல் தீவில் பெண் ஒருவர் தங்கி அந்த ஆதிவாசிகளுடன் நட்பு பாராட்டிய தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பல நூற்றாண்டுகளாக வெளியுலகுடன் எந்த தொடர்பும் இன்றி தனித்து வாழ்ந்து வருபவர்கள் சென்டினல் பூர்வகுடிகள்.

இந்த தீவுக்குள் அத்துமீறி நுழைபவர்களை அம்பு எய்து அச்சுறுத்தி தடுப்பதையே அந்த மக்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

ஆனால் 1991 ஆம் ஆண்டு மானிடவியல் ஆய்வாளரான மதுமாலா சத்ரோபத்யாயா என்ற பெண்மணி அந்த தீவுக்குள் சென்று அங்குள்ள மக்களுடன் நட்பு பாராட்டியுள்ளார்.

சென்டினல் பூர்வகுடி நபர் ஒருவருடன் மதுமாலா தேங்காய் ஒன்றை அளிக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

சென்டினல் பூர்வகுடி மக்களுடன் நட்பு பாராட்டிய முதலும் கடைசியுமான தருணம் அதுவென வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

சென்டினல் ஆதிவாசிகளுடன் நட்பு பாராட்டும் முயற்சியின் ஒருகட்டமாக அமைக்கப்பட்ட குழுவில் முதல் நபர் தான் இந்த மதுமாலா.

மானிடவியல் ஆய்வாளரான மதுமாலா நீண்ட 6 ஆண்டுகள் அந்தமானில் குடியிருக்கும் பூர்வகுடிகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

இந்த காலகட்டத்தில் அந்தமானில் சென்டினல் பூர்வகுடி போன்று இன்னொரு முக்கிய இனமான ஜராவா ஆதிவாசிகளுடன் நட்பு பாராட்டியுள்ளார்.

குறித்த காலகட்டத்தில் அந்தமானில் உள்ள பூர்வகுடிகளில் ஒருவர் கூட தம்மிடம் அத்துமீறியதில்லை எனவும் மதுமாலா தமது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சென்டினல் தீவுக்குள் 13 பேர் கொண்ட குழு ஒன்றுடன் முதன் முறையாக மதுமாலா சென்றுள்ளார். அவர்களது தீவுக்குள் இவர்கள் சென்ற படகுநெருங்கியதும், காட்டுக்குள் மறைந்திருந்த சென்டினல் பூர்வகுடி மக்கள் அம்பும் வில்லுடன் சுற்றி வளைத்துள்ளனர்.

உடனே படகில் எடுத்துச் சென்ற தேங்காய்களை அவர்களுக்கு அருகாமையில் கடலில் வீசியுள்ளனர். முதலில் தயங்கியவர்கள் பின்னர் கடலில் மிதந்த தேங்காய்களை ஒவ்வொன்றாக எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் மேலதிக தேங்காய்களை கொண்டுவர மதுமாலா உள்ளிட்ட குழுக்கள் கப்பலுக்கு திரும்பியுள்ளனர்.

திரும்பி வந்து மேலும் அதிக தேங்காய்களை அந்த மக்களுக்கு மதுமாலாவும் குழுவும் அளித்துள்ளனர். இதனிடையே சில சென்டினல் மக்கள் படகு அருகே வந்து பார்வையிட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு தயாரான சில இளைஞர்களை அங்குள்ள பெண்கள் தடுத்ததாகவும் மதுமாலா குறிப்பிடுகிறார்.

சென்டினல் மக்கள் எப்போதும் முதலில் தாக்குவது இல்லை எனவும், அவர்களின் எச்சரிக்கையை புறந்தள்ளியவர்களை மட்டுமே அவர்கள் தாக்குவதாகவும் மதுமாலா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பிரித்தானியர்கள் ஆட்சி செய்த காலகட்டத்தில் அந்தமான் பூர்வ குடிகள் சுமார் 3,000 பேர் இருந்துள்ளதாக கூறும் மதுமாலா, பிரித்தானிய ராணுவமே பெரும்பாலான பூர்வகுடிகளை துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாக்கியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.