உங்களுக்கு வாய்ப்புண் அடிக்கடி வருகிறது?

வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயம்தான். ஆனால் அதைக் கவனிக்காமல் விட்டாலோ அடிக்கடி வந்தாலோ பிரச்சினை பெரிதாகிவிடும்.

மேலும் வாய்ப்புண் வெகு நாட்களுக்கு ஆறாமல் இருந்தால் அது புற்றுநோயாக மாறுவதற்கும் வாய்ப்புண்டு. ஆகவே வாய்ப்புண்தானே என்று அலட்சியமாக இருக்காமல் காரணம் அறிந்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

வாய்ப்புண் யாருக்கு வரும்?
  • நீண்ட நாட்களுக்குச் சரிவிகித உணவைச் சாப்பிடாதவர்களுக்கு ரத்த வெள்ளை அணுக்கள் குறைந்துவிடும். இதன் விளைவாக உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து வாய்ப்புண் வரும்.
  • உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும் இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கும் இதன் தாக்கம் அதிகம்.
  • வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடுபவர்கள், புகை பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோருக்கு அடிக்கடி வாய்ப்புண் வரலாம்.
  • பெண்கள் சாப்பிடும் கருத்தடை மாத்திரைகளும் வாய்ப்புண் ஏற்படக் காரணமாகின்றன. வாய்ப்புண் வருவதற்கு ஒவ்வாமையும் முக்கியக் காரணம்தான்.
  • வைட்டமின் பி2 குறைபாடு இருந்தால் வாயின் இரண்டு ஓரங்களிலும் வெள்ளை நிறத்தில் வெடிப்புகள் தோன்றும்.
  • இரைப்பையில் புண் உள்ளோருக்கு அங்கே சுரக்கிற அதீத அமிலம் தூக்கத்தில் உணவுக்குழாயைக் கடந்து வாய்க்கு வந்துவிடும்.
  • கூர்மையான பற்கள் இருந்தால் அவை உள் கன்னத்தைக் குத்தி புண்ணை உண்டாக்கும். கவனக்குறைவாகச் சாப்பிடும்போது கன்னம் கடிபட்டு வாய்ப்புண் ஏற்படலாம்.
தடுப்பது எப்படி?
  • பால், தயிர், முட்டை, முளை கட்டிய பயறுகள், கொண்டைக் கடலை, பச்சைப் பட்டாணி, கோதுமை, கேழ்வரகு, சுண்டைக்காய் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டால் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக வாய்ப்புண் ஏற்படுவதை நிச்சயம் தடுக்கலாம்.
  • பெரும்பாலான வாய்ப்புண்கள் சரியான உணவு மூலமே குணமாகி விடும். அதேநேரத்தில், மருத்துவரின் ஆலோசனைப்படி ஆன்ட்டிசெப்டிக் திரவத்தைப் பயன்படுத்தி வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் சீக்கிரத்தில் குணமாகும்.
  • ஸ்டீராய்டு மற்றும் வலி மரத்துப் போகச் செய்யும் களிம்புகளை வாய்ப்புண்ணில் தடவலாம். இவற்றோடு வலி நிவாரணி மாத்திரைகளையும் ஒரு வாரம் சாப்பிட வேண்டும்.
  • லாக்டோபேசில்லஸ் மருந்து கலந்த மல்ட்டி வைட்டமின் மாத்திரை மற்றும் இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் மாத்திரைகளை ஒரு மாதம் சாப்பிட வேண்டும். அப்போதுதான் வாய்ப்புண் மீண்டும் வராது.
  • பூஞ்சையால் வரும் வாய்ப்புண்ணுக்குக் காளான் கொல்லி மருந்தைத் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.