உத்திரபிரதேச மாநிலத்தில் திருமண நாளை பெற்றோர் தள்ளிபோட்டதால், விரக்தியில் இளம்ஜோடியினர் விஷம் குடித்து மேற்கொண்ட தற்கொலை முயற்சியில் இளம்பெண் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் காஸியாபாத் பகுதியில் உள்ள தொலைக்காட்சி பழுது பார்க்கும் கடையில் ஊழியராக பணியாற்றி வருபவர் சுபோத் காண்ட் என்ற 25 வயது இளைஞர்.
இவரும் அதே பகுதியை சேர்ந்த 20 வயதான பூஜா என்ற இளம்பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார்.
இருவரின் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவரவே, வீட்டாரின் சம்மதத்துடன், நவம்பர் 19ம் தேதி திருமணம் வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில் இரு வீட்டாருக்கும் இடையில் கருத்து வேறுபாடு எழுந்ததால், திருமணத்தை அடுத்த ஜூன் மாதம் வைத்துக்கொள்ளலாம் என திருமணத்தை தள்ளிப்போட்டுள்ளனர்.
இதனால் மனமுடைந்த இளம்ஜோடியினர், பஷாரிய பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
இதில் பூஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதேசமயம் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சுபோத், தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மகளின் தற்கொலைக்கு காரணம் சுபோத் குடும்பத்தார் தான் என பொலிஸில் புகார் கொடுத்துள்ள பூஜாவின் தாய், மகளை திருமணம் செய்துகொடுக்கும்போது அதிகமான வரதட்சணை வேண்டும் என சுபோத் வீட்டார் கேட்டனர். அதனால் தான் நாங்கள் திருமணத்தை தள்ளி போட்டோம்.
நவம்பர் 8ம் தேதி எங்களுடைய வீட்டிற்கு வந்த சுபோத், கோவிலுக்கு சென்றுவிட்டு வருகிறோம் என கூறி மகளை அழைத்து சென்றார்.
ஆனால் அவர்கள் இருவரும் திரும்பி வரவில்லை. 29ம் தேதி காலை போன் செய்தபோது, ஹரித்துவாரில் இருப்பதாக என்னுடைய மகள் கூறினாள். அதன் பிறகு வெள்ளிக்கிழமை காலை 5.30 மணிக்கு போன் செய்த என்னுடைய மகள், விஷம் குடித்துவிட்டேன் என கூறியதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இருவரும் கோவிலுக்கு சென்று திருமணம் செய்துகொண்டதாகவும், பூஜா தற்கொலையின் போது நெற்றியில் குங்குமம் வைத்திருந்ததாகவும் அவருடைய தாய் தெரிவித்துள்ளார்.
தற்போது இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் இரு குடும்பத்தாரையும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.