ஜெயலலிதாவின் இதயத்திற்கு மசாஜ் செய்யப்பட்டது ”-அப்போலோ மருத்துவர்களின் பதிலால் விசாரணை ஆணையம் அதிர்ச்சி!

ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டபோது அவரது இதயத்திற்கு மசாஜ் செய்யப்பட்டது என ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மருத்துவர்கள் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்கள் முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தமிகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா 2016ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது மரணம் குறித்து பலரும் சந்தேகம் ஏற்படுத்தியதை அடுத்து அது குறித்து விசாரிக்க ஓய்வுப்பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை தமிழக அரசு நியமித்தது.

அதன்படி ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அவரது உதவியாளர்கள், அப்போலோ மருத்துவர்கள், எயிம்ஸ் மருத்துவக்குழு, லண்டன் மருத்துவர் ரிச்சர்ட், கட்சி நிர்வாகிகள் என அனைவரிடமும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்த விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற விசாரணையின் போது டிசம்பர் 4ம் தேதி ஜெயலலிதாவிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டபோது அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து இதயம் மற்றும் நுரையீரல் நோய் தடுப்பு சிறப்பு மருத்துவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

அப்போது ஜெயலலிதாவின் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்கள் முரண்பட்ட தகவல்களை அளித்ததாக கூறப்படுகிறது. டாக்டர் ரமேஷ்வெங்கட்ரமன் கூறுகையில், “ ஜெயலலிதாவிற்கு டிசம்பர் 4ம் தேதி மாரடைப்பு ஏற்பட்ட போது அறுவை சிகிச்சை மூலம் மார்பை பிளாந்து (செனாடமி) இதயம் மசாஜ் செய்யப்பட்டது. இதய மசாஜ் செய்வதற்கு 20 நிமிடங்கள் ஆனது “ என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மற்றொரு மருத்துவர் நரசிம்மன் “ செனாடமி என்ற அறுவை சிகிச்சையை மேற்கொள்வதற்கு 15 நிமிடங்கள் அனது என்றார். மருத்துவர் சுந்தர், ” ஜெயலலிதாவுக்கு இதயம் செயல் இழந்ததும் சி.பி.ஆர். என்ற சிகிச்சை 45 நிமிடங்கள் அளிக்கப்பட்டது. அப்படி இருந்தும் இதயம் துடிக்கவில்லை. எனவே, 10 நிமிடங்களில் செனாடமி மேற்கொள்ளப்பட்டது “ என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதே குழுவில் இடம்பெற்ற மருத்துவர் மின்னர் ஓரா, “ ஒரே நேரத்தில் செனாடமி அறுவை சிகிச்சையும், சி.பி.ஆர். சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. செனாடமி சிகிச்சைக்கு 30 நிமிடங்கள் எடுத்து கொள்ளப்பட்டது“ என்று குழப்பியுள்ளார்.

ஆனால் டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதாவை பரிசோதித்த எயிம்ஸ் மருத்துவர்கள் அவரது உடல் குளிர்ச்சி நிலையில் இருப்பதால் எதுவும் சொல்ல முடியாது என்றும், அவரது உடலை சாதரண வெப்பநிலைக்கு கொண்டு வரும்படியும் அறிவுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது. அதன்பிறகு ஜெயலலிதா உடல் வெப்பநிலை சாதாரண நிலைக்கு கொண்டுவரப்பட்டது. எனினும் அவரது இதயம் இரவு 11.30க்கு செயலிழந்து விட்டதாக எயிம்ஸ் மருத்துவர்கள் உறுதிபடுத்தினர்.

ஆனால் தற்போது அப்போலோ மருத்துவர்கள் ஜெயலலிதாவிற்கு 4ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் இதயத்திற்கு மசாஜ் செய்ததாக கூறியது விசாரணை ஆணையத்தை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.

உண்மையை தெரிந்து கொள்ளும் நோக்கில் விசாரணை ஆணையம் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையின் டீன் ஜெயந்தி மூலம் தீர்வு காண முடிவெடுத்து, அவரை நேரில் ஆஜராக உத்தரவிட்டது. அதன்படி டீன் ஜெயந்தி ஆஜரானார். அவரிடம் “ செனாடமி அறுவை சிகிச்சை மற்றும் சி.பி.ஆர். சிகிச்சை முறைகள் குறித்து நீதிபதி கேட்டார்.

அதற்கு பதிலளித்த ஜெயந்தி ” அரசு மருத்துவமனையில் இதுவரை செனாடமி அறுவை சிகிச்சை மேற்கொள்ளவில்லை. கடைசி முயற்சியாக சி.பி.ஆர். என்ற சிகிச்சை மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது ”என கூறினார். மேலும், செனாடமி அறுவை சிகிச்சையையும், சி.பி.ஆர். சிகிச்சையையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளலாம் என்று பாடத்தின் மூலமே படித்ததாகவும், இரண்டு
சிகிச்சைகளையும் மேற்கொண்ட அனுபவம் எதுவும் இல்லை என்றும் ஜெயந்தி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.