அனைத்துலக வல்லரசுகள் தமது அதிகார செயல் வல்லமையை இன்னுமொரு அரசின் மீது தாம் கொண்டுள்ள செல்வாக்கின் அடிப்படையில் உறுதிப்படுத்த முயல்கின்றன. வேறு ஒரு அரசு தனது இடத்தை இட்டு நிரப்பி விட முடியாதவகையில் எப்பொழுதும் இயங்கி கொண்டிருக்கும் நிலையே அனைத்துலக உறவாக பரிணமித்துள்ளது.
அரசுகளே முதன்மையானவை என்ற நியதியை கொண்ட அனைத்துலக அரசியலில் செயல் வல்லமை என்பது அந்த அரசுகளின் பரப்பளவு, அதன் சனத்தொகை , பொருளாதாரம் ஆகியவற்றுடன் இராணுவம், மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தி ஆகியன தெளிவாக காணக்கூடிய முக்கிய தனிச்சிறப்பு பண்புகளாக பார்க்கப்படுகிறது.
அதேவேளை அந்த அரசுகளினது அனைத்துலக ஆளுமை, அவை தமது அனைத்துலக கட்டமைப்பை உருவாக்க கொண்டுள்ள குறிக்கோள் , அதை நோக்கியதான கடின உழைப்பு , உள்நாட்டிலே தேசிய நீட்டத்திலான விருப்பு ஆகியன அந்த அரசுகளின் கண்ணுக்குப் புலப்படாத தனிச்சிறப்பு பண்புகளாக பார்க்கப்படுகிறது
சீனா ஒரு பொருளாதார வல்வரசாக தன்னை உயர்த்தி கொள்வதற்கு மேற்கூறிய பொது பண்புகள் அனைத்தும் ஒருமித்து காணப்பட்டதன் பலனாலேயே இன்று ஐக்கிய அமெரிக்காவின் அனைத்துலக செல்வாக்கிற்கு சவால் விடும் ஒரு பெரிய நாடாக பார்க்கப்படுகிறது.
‘சுதந்திரமான- திறந்த ஆசிய பசுபிக்’ என்ற பதத்தை வலியுறுத்தும் அமெரிக்கா இந்த கொள்கை மீதான உறுதி முன்பு என்றும் இல்லாத அளவு வலிமையானதாகி உள்ளது. அமெரிக்காவின் பொருளாதார அரசியல் பாதுகாப்பு பாத்திரம், இந்தோ பசுபிக்கரை நாடுகளுக்கு மிகவும் முக்கியமானது. இதனாலேயே அமெரிக்கா இந்த நாடுகளில் பல ட்ரில்லியன் டொலர் நிதி முதலீடு செய்துள்ளது என்று வலியுறுத்துகிறது.
மேற்கு பசுபிக்கரை நாடான பப்புவா நியுகினியாவில் இம் மாதம் நடுப்பகுதியில் ஆசிய பசுபிக் பொருளாதார கூட்டுறவு அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் வருடாந்த கூட்டம் இடம் பெற்றது.
இந்த கூட்டதொடரிலே உரையாற்றிய, அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ் அவர்கள், அபிவிருத்திக்காக கடன் பளுவை உயர்த்துவதையோ அல்லது கடன்பெறுவதன் மூலம் இறையாண்மையை விட்டு கொடுப்பதையோ அமெரிக்கா என்றும் ஏற்று கொண்டதில்லை என்று குறிப்பிட்டார்.
அனைத்துலக நாடுகளின் கூட்டத் தொடர்கள் இடம்பெறும் பொழுது, அதன் முடிவில் அனைத்து நாடுகளின் ஒப்புதல்களின் அடிப்படையில் ஒரு இறுதி அறிக்கை தயாரிக்கப்படுவது பொதுவான இராஜதந்திர பண்பாடாக கொண்ட நிலையில், பப்புவா நியுகினியா மகாநாட்டில் இறுதி உடன் பாடு எட்டப்படாமலே கூட்டத்தொடர் முடிவடைந்தது.
அமெரிக்க – சீன அதிகாரிகள் மத்தியிலும் அறிக்கை தயாரிப்பதில் இழுபறி நிலை தோன்றி இருந்தது.
இந்தக் கூட்டத்தொடரில் ஆசிய பசுபிக்கரை நாட்டு தலைவர்களே பொதுவாக பங்குபற்றவது வழக்கம். ஆனால் இவ்வருடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் சார்பாக , துணை அதிபர் மைக் பென்ஸ் அவர்கள் பங்கு பற்றியதுடன் சீனா மீது அதிக குற்றசாட்டுகளை வைப்பதன் மூலம் திடமான அமெரிக்க வெளியுறவு கொள்கை நகர்வுகளின் வெளிப்பாட்டை அதிகம் காணக்கூடியதாக இருந்தது.
அதேவேளை, பப்புவா நியுகினியா தீவுகளில் ஒன்றான மனுஸ் தீவகற்பத்தில் லொம்றம் என்ற சிறு கடற்கரை பகுதியில் அவுஸ்திரேலிய அமெரிக்க கடற்படை தளம் ஒன்று அமைக்கப்படும் எனவும் துணை அதிபர் மைக் பென்ஸ் அறிவித்திருந்தார். இது குறித்து விரிவான ஆய்வை இன்னுமொரு கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
தெற்கு ,தென் கிழக்கு ஆசியாவிலிருந்து படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு இடம் பெயரும் மக்கள் கூட்டம் மனுஸ் தீவில் இடைமறிக்கப்பட்டு தடுத்து வைக்கப்படுவது இங்கே குறிப்பிடத்தக்கதாகும். இதில் பலர் ஈழத்தமிழர்களாகவும் இருந்திருக்கிறாகள்.
இந்த கூட்டத்தொடரின், பின்பு அமெரிக்க, சீனா – இரு வல்லரசுகளின் தலைவர்களும் அடுத்து நவம்பர் 30 இல் ஆர்ஜெரீனாவில் இடம்பெற இருக்கும் உலகின் இருபது பெரிய நாடுகளின் மாநாட்டில் ஆலோசிக்க உள்ளனர்.
இந்த மாநாட்டில் உலக நாடுகள் மத்தியிலான செல்வாக்கு யார் பக்கம் என்பது குறித்து சீன அமெரிக்க கொந்தளிப்பு நிலையையையும் அதிகம் காண கூடியதாக இருக்கும் என்பது பலரதும் பார்வையாக உள்ளது.
ஆக, சீன – அமெரிக்க செல்வாக்கு போட்டி மிக விரைவில் புதிய இரு பெரும் கூட்டுகளை உருவாக்கக் கூடிய தன்மையை நோக்கி செல்வது தவிர்க்க முடியாத நிலையை அடைவதற்கு வாய்ப்பு உள்ளது.
இந்து சமுத்திர பிராந்தியத்தில் மாலைதீவிலும் சிறிலங்காவிலும் ஏற்பட்டு வரும் அரசியல் மாற்றங்கள் இந்த சீன -அமெரிக்க போட்டியை நன்கு விம்பப்படுத்துவதாக பல்வேறு ஆய்வாளர்களும் எழுதி வருகின்றனர்.
மாலைதீவு அரசியல் மாற்றங்களின் பின்பு மேலைத்தேய அல்லது வட அத்திலாந்திக்கரை தாராள ஜனநாயகத்தினதும் அதன் துணை நின்று கூட்டு அனைத்துலக அரசியல் நிகழ்த்தும் இந்தியாவினதும் சார்பு அரசாங்கமாக புதிய மாலைதீவு அரசாங்க நிர்வாகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
மாலைதீவின் உள்நாட்டு அரசியல் மற்றம் சமூதாய பொறிமுறைகளுக்கு ஏற்ப அந்த நாட்டின் அரச கட்டமைப்பு பல்வேறு கொந்தளிப்புகளுக்கு பின்பு, மீண்டு நிறுவப்பட்ட நிலையையும் அதன் தற்போதைய அரசியல் உறுதித்தன்மையையும் பார்க்கும் இடத்து சிறிலங்காவின் எதிர்காலத்தை அதன் அரசியல் சமூக பொறிமுறைகளுக்கு ஏற்ற ஒரளவுக்கேனும் உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.
மிகவும் நுணுக்கமான ஒழுங்கமைக்கப்பட்ட அனைத்துலக அரசியல் தலையீட்டின் மத்தியில், மாலைதீவு இன்று தனது நிலையை அடைந்திருக்கிறது. இந்திய இராணுவ பாதுகாப்பு நடவடிக்கைகள். ஐரோப்பிய கூட்டு நாடுகளின் பொருளாதார தடை எச்சரிக்கைகளுடன் அமெரிக்காவின், மக்களின் தீர்ப்பிற்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்பன போன்ற முன் எச்சரிக்கையும் மாலைதீவை மீண்டும் மேற்கு நாடுகள் நோக்கிய அனைத்துலக அரங்கில் நிலை எடுப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சீன செல்வாக்கிற்கு ஆதாரமாக இருந்த இஸ்லாமிய அடிப்படைவாத போக்குடைய அப்துல்லா யமீன் அவர்களை பதவியிலிருந்து இறக்கி, புதிய தலைவர் இப்ராகிம் சொலீ அவர்கள் பதவியில் ஏற்றப்பட்டிருக்கிறார். இவரை பதவி அமர்த்தலில் பின்புல இந்திய அரசியல் பொறியியல் நகர்வுகள் யாவும் இரகசியமாகவே உள்ளன.
சீனா அனைத்துலக நாடுகளின் உள்நாட்டு அரசியலில் தலையிடுவது இல்லை என்ற போக்கை வெளியுறவுக் கொள்கையாக கொண்டிருப்பதாக கூறிக்கொள்ளும் அதேவேளை, எந்த நாடுகளின் உள்நாட்டு அரசியலிலும் ஜனநாயக முறைமை குறித்தோ அல்லது எதாச்சாதிகார முறைமை குறித்தோ கவலைப்படாது தனது பொருளாதார நலன்களை மட்டுமே கவனத்தில் கொண்டுள்ளது.
சீனா 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடனை வழங்கி உள்ளது. மாலைதீவின் 80 சதவீத கடன் தொகை சீனாவுடையதே என்பது அனைத்துலக நாணய நிதிய புள்ளி விபர தகவல் ஆகும்.
சீன அரச வெளியீடான குளோபல் ரைம்ஸ் கடந்த நவம்பர் 25 ஆம் திகதி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், மாலைதீவின் புதிய அதிபர் சொலீ அவர்கள் என்ன தான் இந்திய சார்பு போக்காளர் என்று இந்திய மற்றும் மேலைத்தேய ஊடக அறிக்கைகள் கருத்து வெளியிட்டு கொண்டிருந்தாலும். பெரிய அளவிலான மாற்றங்களை இந்திய தரப்பு எதிர்பார்க்க முடியாது என்று கூறியுள்ளது.
பதவி ஏற்பு வைபவம் முடிந்து அடுத்த நாள் சீன அதிபர் சீ ஜின் பிங் அவர்களுடைய விசேட தாதுவராக மாலை தீவு சென்றிருந்த சீன கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் லோ சங்ஆங் அவர்களுடன் நிகழ்ந்த கலந்துரையாடலில் அதிபர் சொலீ அவர்கள் சீனாவுடன் தமது உறவை வளர்த்து கொள்வதில் திடமாக இருப்பதாக கூறி உள்ளார் என்று குளோபல் ரைம்ஸ் தெரிவித்துள்ளது.
மேலைத்தேய ஆய்வாளர்கள் தமது ஆய்வுகளின் அடிப்படையில் மாலைதீவு சீன கடன் பளுவிலிருந்து எழுந்திருப்பது மிகவும் கடினம் என்ற கூறி உள்ளனர். முறிந்திருந்த உறவை புதுப்பித்து கொள்வதற்கு தனக்கு ஒரு மீள் சந்தர்ப்பம் கிடைத்தமை இட்டு மட்டும் இந்தியா நின்மதி அடையலாம் என்று கூறி உள்ளனர்.
ஆக மாலைதீவு இந்திய சார்பானது போல காணப்பட்டாலும் முற்று முழுதான இந்திய ஆதரவு நாடாக என்றும் இருந்து விடப்போவது இல்லை. திரும்பவும் சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் தமது செல்வாக்கை இந்த சிறு தீவில் நிலைநாட்டுவதற்கு எப்பொழுதும் முயற்சித்த வண்ணமே இருப்பர்.
மேலும் மாலைதீவில் எதிர்க்கட்சி கூட்டணி ஒன்றிடமே ஆட்சி கையளிக்கப்பட்டுள்ளது. இப்ராகிம் சொலீ அவர்கள் அந்த கூட்டணியின் சார்பில் அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த கூட்டணியில் இருப்பவர்கள் எவர் எந்த பக்கம் சாய்வார்கள் என்பது இன்னும் ஒரு கேள்வியாகும்
மாலைதீவில் இடம் பெறும் இந்த அரசியல் நகர்வுகளின் வினைப்பயனே சிறிலங்காவிலும் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது.
சிறிலங்காவில் அதிகாரத்திற்காக போராடும் மகிந்த ராஜபக்ச தரப்பும் ரணில் விக்கிரமசிங்க தரப்பும் எந்த வகையிலும் தமது சீன ஆதரவு போக்கையோ இந்திய நேசப்பார்வை போக்கையோ மாற்றி கொள்ள முடியாது.
சீனாவும் இந்தியாவும் தமது செல்வாக்கை நிலை நிறத்தி கொள்வதில் முக்கிய கவனம் செலுத்திய வண்ணமே இருப்பர். இந்த நிலையில் சிங்கள பௌத்த அடிப்படைவாதத்தின் பாதுகாப்பு முக்கிய இடம் வகிக்க இருக்கும் அதேவேளை, இந்திய மற்றம் மேலைத்தேய உள்நாட்டு பொறிமுறைத் தலையீடுகளுக்கு பெரும் தேவை ஒன்று இருப்பது தவிர்க்க முடியாததாக உள்ளது.
தமிழ் கட்சிகளை சேர்ந்தவர்கள் தம்மை எந்த வல்லரசுகளின் தூதரகங்களும் தொடர்பு கொள்ளவில்லை என்று ஊடக பேட்டிகளிளில் குறிப்பிடுவதை காணக்கூடியதாக உள்ளது. சாதாரண உரையாடல்களிலும் உங்களுக்கு (தமிழர்களுக்கு ) எது நலன் பயப்பதாக படுகிறதோ அதனையே தெரிவு செய்யுங்கள் என தமக்கு மேலைத்தேய தாதரக அதிகாரிகள் குறிப்பிடுவதாக கூறினர். இது தமிழர்களின் தேவை அவர்களின் நலன்கள் குறித்து அவர்கள் நன்கு அறிவர் என்பதையே காட்டுகிறது.
மிதவாத தலைமையை எதற்கும் சமாதான காரணம் கூறுதல், உறுதியான நிலைப்பாடற்ற நடுவு நிலை, இரு பகுதியிலும் அதிக நன்மை பெறக்கூடிய நிலை ஆகியவற்றின் பெயரால் கூட்டு நலனில் இருந்து வேறுபட்டு நிற்றல் ஆகியவற்றை மையமாக கொண்டு தாதரகங்கள் தீர்மானிக்கிண்றன.
இந்த நிலையில் சிறிலங்காவின் சனநாயகத்தையும் அதன் அரசியல் யாப்புகளையும் பாதுகாக்கும் காவலர்களாக தம்மை தற்போதைய தமிழர் தலைமைத்துவம் காட்டிகொள்வது சரியானதா என்ற கேள்வி உள்ளது.
மிதவாத தலைமை தமது போக்கிலிருந்து விடுபட்டு தமது தேவைகளையும் அவற்றின் கேள்வியையும் புதிய பரிமாணத்தில் பார்க்க வேண்டிய காலம் இதுவாகவே படுகிறது.
இந்தியாவிடமே இந்திய- சிறிலங்கா ஒப்பந்த்தின் பேரால் நுள்ளிக் கொடுக்கப்பட்ட 13ஆவது திருத்த சட்டத்திலிருந்து பின் நோக்கி திம்பு பேச்சு வார்த்தை காலத்திற்கு செல்ல கோரிக்கை விடவேண்டும்.
இன்றைய காலம் தமிழர் தரப்பு முக்கிய அரசியல் பலம் பெறக்கூடிய காலம் என்பதை தமிழர் தரப்பு மறந்து விடலாகாது. அதனை நகர்த்தும் விடயத்திலேயே அதன் கனதி தங்கி உள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் சிறிலங்காவின் அரசியல் பெரும் அதிகார மையமாக ஆக்கப்பட்டுள்ளது
இந்திய -அமெரிக்க கூட்டு ஆதரவான ஒரு ஆட்சி சிறிலங்காவில் அமைய வேண்டுமாயின், தமிழர் தரப்பினர் பங்களிப்பு தேவை என்பதை நிறுவுவதன் மூலமே அரசியல் தலைவர்கள் தம்மை முதன்மைப்படுத்தி கொள்ளமுடியும். தாம் சார்ந்த மக்களின் சார்பாக தம்மை முதன்மைப் படுத்தி கொள்ளும் தலைவர்களே நகர்வுகளை உருவாக்க முடியும்
இந்த வகையில் இந்திய -அமெரிக்க கூட்டும் இந்தியாவின் தென் பிராந்திய நகர்வுகளின் கண்காணிப்பு தளமுமான சிறிலங்காவில், தமிழர் தரப்பினர் ஒருமித்த செயற்பாடு தவிர்க்க முடியாததாகிறது.
தலைவர்கள் ஆளுக்கொரு கட்சி ஆரம்பித்து விட்ட நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு எனும் கூட்டுக்குள் இருக்கும் கட்சிகளின் எண்ணிக்கையிலும் பார்க்க வெளியே அதிகம் கட்சிகள் உள்ளன.
மேலும் சிலர் சிறிலங்கா மைய அரசியல் சூறாவளியில் சிக்குண்டு, வடக்கு வேறு கிழக்கு வேறு, என்று தனிப்பட்ட குரோதங்களை முன் நிறுத்தி மக்கள் மனங்களை திசைமாற்றுவது தமிழ் பேசும் மக்களது அரசியல் ஆராக்கியத்திற்கு எதிரானதாகும் .
தமிழ் மக்கள் தமது அரசியல் பொறிமுறையை தமது பலம் அறிந்து நகர்த்த வேண்டிய காலம் இது என்பது நிச்சயம் சரியானதாகும். ஏனெனில் ஏற்கனவே அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் அவர்கள் குறிப்பிட்டது போல, தமது கடன் பளுவிற்கு தமது இறையாண்மையை மாலைதீவும் சிறிலங்காவும் ஏற்கனவே விற்றுவிட்டாயிற்று.
சீனா தனது பொருளார செல்வாக்கு பலத்தில் அதிக நம்பிக்கை கொண்டுள்ளது. அமெரிக்க வல்லரசுடனான உறவு மேலும் மேலும் கொந்தளிப்பை நோக்கியே செல்லவும் உள்ளது என்பது மேலைத்தேய ஆய்வாளர்கள் பலரதும் பார்வையாகும்.
ஆக மேலும் மேலும் உப பிராந்தியங்களில் குறிப்பாக இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் அதிக செல்வாக்கை பெறும் போட்டிகள் அதிகரிக்க உள்ளன என்பது தெளிவு.