தொழிற்சங்கவாதிகள் என்று அரசியல் பதவிகளில் மோகங்கொண்டு அதற்கு அடிமையானார்களோ அன்றைய தினமே தொழிற்சங்க ரீதியான உரிமைகள் பற்றி பேசுவதற்கோ செயற்படுவதற்கோ அருகதையற்றவர்களாகிப்போனார்கள். இதில் மலையகத்தின் பிரதான தொழிற்சங்கங்கள் எல்லாமே அடங்குகின்றன.
ஆரம்பத்தில் தொழிற்சங்க ரீதியாக உரிமைகளைப் படிப்படியாகப் பெற்று வந்த மலையக பெருந்தோட்ட சமூகம் தற்போது அரசியல் ரீதியாக சலுகைகளை மட்டுமே பெற்று வருகின்றது. அதிலும் பேரினவாத கட்சிகள் பிய்த்து பிய்த்து கொடுப்பதை வாங்கிக்கொண்டு திருப்தியடைய வேண்டிய நிலைமைக்கு இவர்கள் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். தொழிலாளர்களின் சம்பள விவகாரமும் அப்படியானது தான். தொழிற்சங்க போராட்டக்குணம் முற்றிலுமாக மழுங்கடிக்கப்பட்ட நிலையில் இன்று அரசியல்வாதிகளாகி ,அமைச்சர்களாகி தொழிலாளர்களுக்காக நூறையோ ஐம்பதையோ கெஞ்சி வாங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இலங்கையைப்பொறுத்த வரை தேசிய கட்சிகள் அனைத்துமே பெயரில் தான் வேறு பட்டு நிற்கின்றனவே ஒழிய சிறுபான்மையினருக்கு உரிமைகளை வழங்கும் நிகழ்ச்சி நிரலில் அவை ஒன்று பட்டே நிற்கின்றன. இதை அறிந்தும் மலையகக் கட்சிகள் தனித்தனியே தமது அரசியலை முன்னெடுத்து வருகின்றன. அதாவது தமது அரசியல் சுயலாபத்துக்காக தேசிய கட்சிகளிடம் தஞ்சமடைந்து அரசியல் செய்யும் இவர்கள் தொழிலாளர்களிடம் மட்டும் தொழிற்சங்க பாசாங்கை முன்வைக்கின்றனர். அரசாங்கத்திடம் கைநீட்டி அமைச்சுப்பதவிகளையும் வேறு சலுகைகளையும் வாங்கிய பின்னர் அரசாங்கத்துக்கு எதிராக எவ்வாறு இயங்குவது உரிமைகளைப்பற்றி எங்ஙனம் கேள்வி எழுப்புவது?
இத்தகைய பொறிக்குள் தான் இன்று மலையக அரசியல் கட்டுண்டு கிடக்கின்றது. தொழிற்சங்க ரீதியாக நாம் கேட்டுப்பெற்ற உரிமைகளை இன்று அரசியல் ரீதியாக படிப்படியாக இழந்து வருகிறோம். தொழிற்சங்க வலிமையோடு கேட்டதை பெற்ற காலம் மறைந்து இன்று அரசியல் ரீதியாக கொடுப்பதை வாங்கிக்கொண்டு வாய் பொத்தி மௌனமாக இருக்கின்றது மலையக சமூகம்.கூடவே சுயலாப அரசியலும் கொடி கட்டி பறக்கின்றது.
எது உண்மை எது பொய்?
ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை வாங்கித்தருகிறேன் என்கின்ற தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமானது என்கிறார் புதிய பிரதமர் மஹிந்த , அடிப்படை சம்பளம் 600 ரூபாவுக்கு மேல் ஒரு சதமும் தர முடியாது என்கின்றது முதலாளிமார் சம்மேளனம், புதியதாக தேயிலைச்சபை நிதியை தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியும் என்கின்றது இ.தொ.கா இதில் எது உண்மை எது பொய்? யார் சொல்வதை ஏற்றுக்கொள்வது ? அல்லது யாரை யார் ஏமாற்றுகிறார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
அடையாள வேலை நிறுத்தம்
தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் வேண்டி செப்டெம்பர் மாதம் முதலே கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்து விட்டன. அதிலிருந்து இன்று வரை இந்த ஆர்ப்பாட்டங்களின் வடிவம் மாறினாலும் நோக்கம் ஒன்றாகத்தான் இருந்தது.
தலவாக்கலையில் தொழிலாளர் தேசிய சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம், தோட்டங்கள் தோறும் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், சவப்பெட்டி ஆர்ப்பாட்டம் ,பாதயாத்திரை ,வேல்பூட்டுதல் ,தலைநகரில் இளைஞர்களின் ஆர்ப்பாட்டம் என இது தொடர்ந்தது. இந்நிலையில் திடீரென கடந்த திங்கட்கிழமை அடையாள வேலை நிறுத்தப்போராட்டம் ஒன்றிற்கு அனைவரையும் அழைத்தது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ். புதிய பிரதமர் மஹிந்த ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை வாங்கித்தருவார் என்ற நம்பிக்கையில் அமைச்சுப்பதவியைப் பெற்றுக்கொண்ட இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப்பிறகும் ஒன்றும் நடக்காததையடுத்து கடந்த 23 ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்படுத்தி இதை ஒரு பொது வேலை நிறுத்தமாக அனைவரும் ஏற்று வருகை தர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
மலையகத்தின் பல தோட்டங்கள் நகரப்பகுதிகளில் கறுப்பு கொடிகள் தொங்க விடப்பட்டு மனித சங்கிலி போராட்டங்கள் இடம்பெற்றன. இருப்பினும் அன்று மாலையே அறிவித்தல் ஒன்றைவிடுத்து ஆறுமுகன் இந்தப் போராட்டம் தேசிய அளவில் பலரின் கவனத்தை திருப்பி விட்டதாகவும் பிரதமர் மஹிந்த உடனடியாக புதன்கிழமையன்று 22 கம்பனிகளின் உரிமையாளர்களை சந்தித்து பேச்சு நடத்தப்போவதாகவும் அறிவித்தார். அதே வேளை இந்தப்போராட்டத்துக்கு இ.தொ.காவோ ஏனையோரை உரிமை கோர முடியாது என்றும் இது மக்களால் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அப்படியானால் இதற்கு முன்பு முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் பின்னணியில் வேறு எவரும் இயங்கினார்களா அல்லது அவை எல்லாம் போராட்டமே இல்லையா என்ற கேள்வி எழுகிறது.
மீண்டும் சந்திப்பு
இந்நிலையில் கடந்த புதன்கிழமை கம்பனி உரிமையாளர்கள் மற்றும் தொழிற்சங்க பிரமுகர்களை சந்தித்த பிரதமர் மஹிந்த தொழிலாளர்களின் வேதனம் பற்றி கேள்விஎழுப்பியுள்ளார். இந்நிலையில் கம்பனி உரிமையாளர்களோ ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதி கணக்குகளையும் சேர்த்து ஆயிரம் ரூபாவுக்கு கணக்கு காட்டியதாகத்தெரிகிறது. ஆனால் மஹிந்தவோ நியாயமான அடிப்படை சம்பளத்தைப்பற்றி கதைத்துள்ளார். இந்நிலையில் கம்பனிகளின் உரிமையாளர்கள் தமக்கு திங்கட்கிழமை (நாளை) வரை கால அவகாசம் வழங்குமாறு கேட்டுள்ளனர்.
தொழிலாளர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகின்றதா?
2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவாவதற்கு மலையக பெருந்தோட்ட மக்கள் பாரிய பங்களிப்பினை செய்திருந்தனர். அதாவது அவர்களது கணிசமான வாக்குகள் அவரது வெற்றிக்கு உதவின.அதே போன்று வடக்கு கிழக்கு வாழ் மக்களும் அவருக்கு வாக்குகளை அளித்திருந்தனர். அத்தேர்தலில் தோல்வியுற்ற மஹிந்தவும் தனது மெதமுலன இல்லத்தில் வைத்து கருத்துத்தெரிவிக்கும் போது தமிழர்களாலேயே நான் தோல்வியைத் தழுவினேன் என கூறியிருந்தார். இது சிறுபான்மை மக்களிடையே மனக்கிலேசத்தை அப்போது ஏற்படுத்தியிருந்தது. அதன் தொடர்ச்சியாக இடம்பெற்ற பாராளுமன்றத்தேர்தலிலும் அது எதிரொலித்தது என்னவோ உண்மை. மஹிந்த ராஜபக்ச சிறுபான்மை மக்களிடத்தே இருந்த கோபத்தை வெளிக்காட்டாது கடந்த காலங்களில் மௌனமாகவே இருந்து வந்திருந்தார்.
இறுதி யுத்த நேரத்தில் பெருமளவு தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு மஹிந்த ராஜபக்சவே பொறுப்பு கூற வேண்டும் என சர்வதேச ரீதியாக கண்டனங்கள், குற்றச்சாட்டுகள் பெருகியிருந்த நிலையில் சிறுபான்மை சமூகத்தின் மீது அவருக்கு எரிச்சல் உருவாகியிருந்தமை முக்கிய விடயம். தனது அதிகாரம் தன் கையை விட்டுச்செல்ல சிறுபான்மை மக்களே காரணம் என்ற வடுவை அவரது மனதில் பதியச்செய்ய அவரைச் சூழ இருந்த பேரினவாத சக்திகளும் தாராளமாக செயற்பட்டன. இதுவே மஹிந்தவுக்கு ஆதரவு அளிக்க சிறுபான்மை கட்சிகள் தயங்குவதற்குக் காரணம். ஆனால் மலையகத்தைப்பொறுத்த வரை இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் ஆரம்பத்திலிருந்தே மஹிந்த ஆதரவாளராகவே இருந்தார். அவர் இடையில் எந்தக் காரணங்களுக்காகவும் தன்னை மாற்றிக்கொள்ளாதவராகவே விளங்கினார்.
இதனால் தான் ஆறுமுகன் மீது ஏனையோர் விமர்சனங்களை முன் வைக்கவில்லை. ஆனால் மஹிந்த பிரதமரானவுடன் நிதி அமைச்சும் தனக்கு மேலதிகமாகக் கிடைக்க முதன் முதலாக தனது வாக்கு வங்கியை ஸ்திரப்படுத்தும் நடவடிக்கைகளிலேயே இறங்கினார். அது விவசாயிகளை திருப்தி படுத்தும் செயற்பாடு.
விவசாயத்துறை மீதான வரி நீக்கம்
இறுதி யுத்தத்தை வெற்றி கொண்ட நாயகனாக மஹிந்த விளங்குவதற்குக் காரணமே கிராமப்புறங்களில் அவருக்குள்ள செல்வாக்காகும். ஏனெனில் இலங்கையில் பெரும்பான்மை கிராமப்புற மக்கள் வாழ்ந்து வரும் பகுதிகளிலேயே அதிக இராணுவ குடும்பங்களும் உள்ளன. இன்று வரை அவர்கள் மஹிந்தவை தமது இரண்டாவது கடவுளாக நினைக்கின்றனர். இவர்கள் அனைவரும் விவசாயத்தோடு தொடர்பு பட்ட தொழில்களில் தம்மை இணைத்துக்கொண்டுள்ளனர். இதன் காரணமாகவே நிதி அமைச்சரான மஹிந்த விவசாயத்துறை மீதான வரிகளுக்கு ஐந்த வருட விலக்களித்துள்ளார். விவசாய உற்பத்தி மீதான வரிகள் 28% இலிருந்து 14% ஆக குறைக்கப்பட்டுள்ளன. சிறிய வியாபார செயற்பாடுகளில் ஈடுபடுவோரின் நலன் கருதி பொருளாதார சேவைக்கட்டண எல்லை 12.5 மில்லியன் ரூபாவிலிருந்து 50 மில்லியன் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இலங்கையின் தேசிய உற்பத்தியில் பெரும்பங்களிப்பு செய்யும் துறை விவசாயமா அல்லது தேயிலையா என்பதை சிறு குழந்தைக் கூட சொல்லி விடும். இந்நிலையில் தனது மக்களுக்கு தேவையான பொருளாதார தளர்வுகளை உடனடியாக மேற்கொண்ட மஹிந்த தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் ஏன் உடன் நடவடிக்கை எடுக்க வில்லை என்று எவருமே கேள்வி எழுப்பவில்லை எழுப்பவும் முடியாது. ஆனால் நாட்டின் குழப்பகரமான அரசியல் சூழ்நிலையில் நேரம் ஒதுக்கி சம்பள விவகாரம் தொடர்பில் அவர் பேசுவது வரவேற்கத்தக்கது. ஏனெனில் சிறுபான்மை கட்சிகளில் தற்போதைக்கு இ.தொ.கா மட்டுமே மலையகத்தில் அவருக்கு ஆதரவாக இருக்கும் ஒரே கட்சி. மட்டுமன்றி மஹிந்தவுக்கு ஆதரவு அளித்தமைக்கு ஆறுமுகனுக்கு அமைச்சுப்பதவி கிடைத்ததற்கு அப்பாற்பட்டு அவர் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்.
சமய சந்தர்ப்பம் பார்த்து தொழிலாளர் சம்பள விவகாரம் கச்சிதமாக அமைந்து விட்டது. ஆகவே இவ்விடயத்தில் ஆடு புலி ஆட்டம் விளையாடாது இறுதி முடிவை எடுக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. இல்லையேல் யாரை யார் ஏமாற்றுகிறார்கள் என்பது தெரியாமலேயே இறுதியில் அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபா என்பது மறக்கப்பட்டு எல்லாமாக சேர்த்து ஆயிரம் ரூபாவுக்கு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு விடும் நிலைமையே தற்போதுள்ளது.
சிவலிங்கம் சிவகுமாரன்