சிறிலங்காவில் ஜனநாயகத்தை நிலைப்படுத்துவதற்கு, பொதுத்தேர்தலை நடத்துவதே ஒரே வழி என்று, சர்ச்சைக்குரிய வகையில் நியமிக்கப்பட்ட சிறிலங்காவின் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்று வெளியிட்ட நீண்ட அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
“அறிவிக்கப்பட்ட தேர்தல்களை நடத்துவதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதை சிறிலங்காவில் மாத்திரம் காணமுடியும்.
சிறிலங்கா அதிபர், அரசமைப்பிற்கு ஏற்ப அரசிதழ் அறிவித்தலொன்றை விடுத்ததுடன், தேர்தலுக்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்குமான நாளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்தும் அதிகாரத்தை, நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபருக்கு, அரசியலமைப்பு வழங்கியுள்ளது.
ஏற்கனவே திட்டமிட்டபடி அனைத்தும் இடம்பெற்றிருந்தால் நாட்டில் உறுதித்தன்மையை ஏற்படுத்தியிருக்க முடியும்.
கடந்த ஆண்டு நொவம்பர் மாதம் எல்லைநிர்ணய விவகாரம் தொடர்பில் சிலர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததன் காரணமாக, உள்ளுராட்சி தேர்தல்கள் இடம்பெறாம் போகும் ஆபத்து ஏற்பட்டது.
எனினும் தேர்தல் ஆணையாளர், தேர்தலை நடத்தியே தீருவேன் என தெரிவித்ததும் அரசாங்கம் அதனை தயக்கத்துடன் ஏற்றுக்கொண்டது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் விலக்கப்பட்டன.
அவ்வேளை அரசியல் நோக்கங்களுக்காக நீதிமன்ற நடைமுறைகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன என்பது தெளிவாகியது.
இன்று நாட்டில் ஆறு மாகாணசபைகள் இயங்காத நிலையில் காணப்படுகின்றன. முன்னையை அரசாங்கம் தேர்தல்களை கடந்த ஒரு ஆண்டு காலமாக நடத்தவில்லை.
நாங்கள் போர் முடிவடைவதற்கு முன்னரே, 2008 இல் விடுதலைப் புலிகளை அகற்றிய பின்னர் கிழக்கு மாகாணசபை தேர்தல்களை நடத்தினோம்.
வன்னியில் கண்ணி வெடிகளை அகற்றிய பின்னர் 2013 இல் நாங்கள் வடமாகாண சபை தேர்தல்களை நடத்தினோம்.
இன்று போரில்லாத நிலையிலும் அந்த இரு மாகாணசபைகளும் செயற்படவில்லை..
ஐக்கிய தேசிய கட்சியும் அதனுடன் இணைந்த கட்சிகளும் மக்களை ஏமாற்றுவதற்காக தவறான அறிக்கைகளை விடுத்துவருவதன் காரணமாக கடந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் சிலவற்றை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
எங்களுடைய முதலாவது நாடாளுமன்ற தேர்தல் காலம் முதல் அவசியமான சந்தர்ப்பங்களில் எல்லாம் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
1952 இல் பிரதமர் டி.எஸ். சேனநாயக்க இறந்தவேளை அடுத்தது யார் என்ற மோதல் ஐக்கிய தேசிய கட்சிக்குள் உருவானது. டி.எஸ்.சேனநாயக்கவுக்கு அடுத்த நிலையில் சேர் ஜோன் கொத்தலாவல இருந்த போதிலும் ஆளுநர் சோல்பரி, டட்லி சேனநாயக்காவை பதவி ஏற்குமாறு அழைத்தார்.
பிரதமரான ஒரு சில நாட்களில் அவர் புதிய தேர்தல்லுக்கு அழைப்பு விடுத்து ஆளும்கட்சிக்குள் காணப்பட்ட மோதல்களுக்கு தீர்வை காண்பதற்காக மக்களின் புதிய ஆணையை பெற்றார்.
1959 இல் எஸ்.டபிள்யூ . ஆர்.டி.பண்டாரநாயக்கவின் படுகொலைக்கு பின்னர் தகநாயக்க பிரதமரானார். அமைச்சரவைக்குள் பிளவுகள் ஏற்பட்டவேளை அவரும் புதிய தேர்தலுக்கு அழைப்பை விடுத்தார்.
பலவீனப்படுத்தப்பட்ட ஜனநாயகத்திற்கு தேர்தல்கள் மூலம் மாத்திரே. உறுதித்தன்மையை ஏற்படுத்த முடியும்.
சிறிலங்காவின் அரசமைப்பின் படி இறைமை என்பது மக்களிடத்திலேயே உள்ளது நாடாளுமன்றத்திடமில்லை.
மக்கள் தங்கள் இறைமையை தேர்தல் வாக்களிப்பு மூலமே பயன்படுத்துகின்றனர்.
ஜனநாயகத்தை மதிக்கும் அனைவரையும் இந்த விடயம் குறித்து அவதானமாக ஆழ்ந்து சிந்திக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.