வசந்த சேனநாயக்க – இப்போது எந்தப் பக்கத்தில்?

கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஏற்படுத்திய அரசியல் குழப்பத்துக்குப் பின்னர், ரணில் தரப்புக்கும் மகிந்த தரப்புக்கும் இடையில் மாறி மாறி தாவி பரபரப்பை ஏற்படுத்திய வசந்த சேனநாயக்க நேற்று மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படும், மகிந்த தரப்புக்கு ஆதரவு வழங்கும், அத்துரலியே ரத்தன தேரரினால் ஏற்பாடு செய்யப்பட்டு ராஜகிரியவில் நேற்று நடந்த நிகழ்வில், வசந்த சேனாநாயக்கவும் கலந்து கொண்டிருந்தார்.

இந்தநிகழ்வில், தினேஸ் குணவர்த்தன, பசில் ராஜபக்‌ச, உதய கம்மன்பில ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.  அவர்களுடன், வசந்த சேனநாயக்க  நெருக்கமாக கலந்துரையாடிக் கொண்டிருந்தார்.

இதனால் அவர் மீண்டும் மகிந்த அணிக்குத் தாவி விட்டார் என்று பரபரப்பு ஏற்பட்டது.

எனினும், அதனை நிராகரித்துள்ள வசந்த சேநநாயக்க, நேற்றிரவு அலரி மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

‘அத்துரலியே ரத்தன தேரரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பங்கு பற்றினேனே தவிர, மகிந்த தரப்புடன் இணையவில்லை. அவர்களுடன் இணையப் போவதும் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சியிலேயே இருப்பேன்” என்றும், கூறியுள்ளார்.