5ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர் ஒருவர் தனது மற்ற நண்பர் களுடன் சேர்ந்து இசைநிகழ்ச்சியை நடத்தி, அதன்மூலம் திரண்ட ரூ.50,000 வசூலை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக வழங்கி உள்ளார். திருவேற்காட்டைச் சேர்ந்த மாணவர் திருவருள், 10, அங்குள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சிறுவயது முதலே ‘சாக்சபோன்’ இசைக்கருவி வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தன்னைப்போல் இசையில் ஆர்வம் கொண்ட தனது நண்பர்களை ஒன்றிணைத்து பல்வேறு கச்சேரிகளை நடத்தி வந்தார். புதிதாக விலை உயர்ந்த ‘சாக்சபோன்’ வாங்க சிறுகச் சிறுக ரூ.30,000 சேமித்து வைத்திருந்தார். ஆனால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று கருதிய திருவருள், தான் சேமித்து வைத்திருந்த பணத்துடன் கச்சேரி நடத்தி ரூ.20,000 வசூலித்து மொத்தம் ரூ.50,000ஐ வழங்கி புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நெகிழவைத்துள்ளார்.