இந்தியாவின் மிகப்பெரிய சூதாட்ட நகரம் சிக்கிம் மாநிலத் தலைநகரான காங்டாக் ஆகும்.
பிரம்மிப்பூட்டும் இமயமலைத் தொடர், சிக்கிமின் இனிய விருந்தோம்பல், இதமான காலநிலை, தூய்மையான காற்று என்று ஏற்கனவே சுற்றுலாவாசிகளைக் கவரும் காங்டாக்கில், சூதாட்டமும் சேர்ந்து களைகட்டுகிறது.
இதனால் உல்லாச பிரியர்கள் இங்கு குவிகின்றன.
இங்கு சூதாட்டம் நடைபெறுவதற்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் சூடுபிடிக்கிறது. சூதாட்டத்திற்காக இங்க குவியும் சுற்றுலாப்பயணிகளால் அதிக வருவாய் மாநிலத்தித்துக்கு கிடைக்கும் என அரசாங்கம் நம்புகிறது.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பிரபலமான சூதாட்டங்கள் பலவற்றையும் காங்டாக்கில் ஆடலாம். அவற்றில், ரூலே முதல் மங்காத்தா வரை அடக்கம்.
மேலும், பல்வேறு நட்சத்திர சூதாட்ட விடுதிகளும் இயங்கி வருகின்றன.
இதுபோன்ற சூதாட்ட விடுதிகளால், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன, வரி வருவாய், சுற்றுலா வருமானம் அதிகரித்திருக்கிறது என்கிறார்கள். சூதாட்ட விடுதிகளில் பெரும்பாலும் உள்ளூர்க்காரர்களே பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு சிங்கப்பூரிலும் கோவாவிலும் முறைப்படி பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது.
நட்சத்திர சூதாட்ட விடுதிகளுக்குள் காலடி எடுத்து வைப்பதற்கே காசு கட்ட வேண்டும். பொதுவாக, ரெகுலர், பிரீமியம், வி.ஐ.பி. என்று 3 வித கட்டணங்களை வைத்திருக்கிறார்கள்.
ரெகுலர் என்றால் ரூ. 1500. இதில், சிப்ஸ், நொறுக்குத்தீனிகள், உணவுடன், அளவற்ற மதுபானம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் அடங்கும்.
மற்ற இரு பிரிவுகளிலும் உணவும், மதுபானங்களின் தரமும் உயரும். உல்லாசவாசிகளை மேலும் உற்சாகப்படுத்த, அதிரும் இசையுடன் அழகிகளின் நடனமும் உண்டு.
இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சூதாட்டத்தில் சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் புரள்கிறது என்றொரு கணக்குச் சொல்லப்படுகிறது. இந்தக் கணக்குக்கு வராத சூதாட்ட தொகை தனி. சிறிய மாநிலமான சிக்கிமே பல கோடி ரூபாய் வருவாயை சூதாட்டம் மூலம் பெறுகிறது.
தற்போது மாநிலத்தின் முதல் விமான நிலையம் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், சுற்றுலாப் பயணிகள் வருகையும், அவர்களின் மூலமான வருவாயும் அதிகரிக்கும் என்று சிக்கிம் சூதாட்ட விடுதிகள் நம்புகின்றன.