தென்னைக்கு இழப்பீடு அறிவிப்பு – எவ்வளவு தெரியுமா?

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா பகுதிகளில் உள்ள தென்னை மரங்களுக்கு அரசு இழப்பீடு அறிவித்துள்ளது.

கஜா புயல் தாக்கி மூன்று வாரங்களைத் தாண்டிவிட்டது. கஜா புயலால் தமிழக டெல்டா பகுதியில் ஒரு கோடி தென்னை மரங்கள் சேதமடைந்துள்ளதாகவும், அதில் பாதிக்குப் பாதி தென்னை மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக வேளாண் துறை தகவல் வெளியிட்டுள்ளது.தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில்முக்கியமான விவசாயமாக தென்னை பயிரிடப்படுகிறது. இந்த புயலால் பல்லாயிரக்கணக்கான தென்னை விவசாயிகள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது அரசு புயலால் பாதிக்கப்பட்ட மரக்களுக்கு இழப்பீட்டுத் தொகையை அறிவித்துள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தென்னை மரத்திற்கும் ரூ.1,512 இழப்பீட்டுத் தொகையை அரசு நிர்ணயித்துள்ளது. அதில் இழப்பீடாக 600 ருபாயும் மரத்தை வெட்டி அப்புறப்படுத்துவதற்கு ரூ.500ம், தென்னங்கன்றுகளை மறுசாகுபடி செய்வதற்கு ரூ.312ம், பராமரிப்புக்கு ரூ.100ம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் டெல்டா விவசாடிகள் இந்த இழப்பீட்டுத் தொகைப் போதுமானதாக இல்லை எனவும் இழப்பீடு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.