1990 களின் இறுதியில் மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்திருப்பதாகச் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியவர் ராமர் பிள்ளை.
மூலிகை பெட்ரோல் விவகாரத்தில் புகழின் உச்சிக்கு சென்ற ராமர் பிள்ளை, தனது தயாரிப்பை ராமர் தமிழ் தேவி மூலிகை எரிபொருள் என்று பெயரிட்டு விற்பனையும் செய்தார்.
இதனிடையே, மூலிகை பெட்ரோல் என்ற பெயரில் பெட்ரோலியப் பொருட்களான டொலுவின், நாப்தா போன்றவற்றை கலப்படம் செய்து விற்றதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள், ராமர்பிள்ளையை கைது செய்தனர்.பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், 2016 ஆம் ஆண்டு, ராமர் பிள்ளை உள்ளிட்ட 5 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது நீதிமன்றம்.
அரசியல் தலையீடு காரணமாகவே தன் மீது வழக்கு தொடரப்பட்டதாக, குற்றம்சாட்டுகிறார். 2015 ஆம் ஆண்டு, தனது கண்டுபிடிப்பை பிரதமர் மோடி பார்வையிட்டதாகவும் கூறுகிறார்
இந்நிலையில், ராமர்பிள்ளை யூடியூப் இணையதளத்தில் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
’பாரத பிரதமருக்கும், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் ராமர் பிள்ளையின் கருணை மனு’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு தனது மரண வாக்குமூலம் என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது வீடியோ பதிவில் ’’என்னுடைய தமிழ் மக்களுக்கு அன்பான வேண்டுகோள். இது என்னுடைய இறுதி காணொளி. இனிமேல் நான் காணொளியில் பேசமாட்டேன்.
இது என்னுடைய மரண வாக்குமூலம் என்று சொன்னால் சரியாக இருக்கும். என் உயிரை பணயம் வைத்தாவது உங்களை கையில் சேர்ப்பேன் என்று நான் அளித்த வாக்குறுதிப்படி என்னுடைய செய்முறை விளக்கத்தை உங்கள் கையில் சேர்ப்பேன். அதற்காக டிசம்பர் 10ம் தேதியை முடிவு செய்திருக்கிறேன். 10ம் தேதிக்குள் நான் மக்களுக்கு மூலிகை பெட்ரோர்ல் பார்மூலாவை சமர்ப்பிக்க வேண்டும்.
ஆகவே, உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இதை ஒரு வழக்காக அதுவும் அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும். நான் உங்கள் முன் மூலிகை எரிபொருளை உற்பத்தி செய்து காட்டுகிறேன். அதை சோதனைக்கு அனுப்பி வையுங்கள். நான் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன்.
நான் அதை நிரூபிக்க தவறிவிட்டால் ஆயுள்தண்டனை கொடுத்து சிறையில் அடைத்துவிடுங்கள். இல்லையென்றால் தூக்கு தண்டனை கூட கொடுத்துவிடுங்கள். நான் தயாராக இருக்கிறேன். நீதிமன்றம் தாமாக முன்வந்து இதை விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.
நான் வருகின்ற 11ம் தேதி உயிருடன் இருப்பேனே இல்லையா என்பது உயர்நீதிமன்ற நீதிபதி கையிலும், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கையிலும், தமிழிசை சவுந்தரராஜன் கையிலும் இருக்கிறது.
10ம் தேதி இரவு எனது உயிர் பிரிந்துவிட்டாலும் இறுதி காணோளி காட்சி ஒன்று வெளியாகும். என் அருகில் இரண்டு கல்லூரி மாணவ, மாணவிகள் இருப்பார்கள். அவர்கள் சொல்லும் செய்முறை விளக்க வீடியோவை பார்த்துவிட்டு 11ம் தேதி என்னை குற்றம் சொல்லியவர்கள் கண் கலங்குவீர்கள். இது உறுதி’’ என்று கூறியுள்ளார்.