நஞ்சருந்திவிட்டு பொலிஸ் நிலையத்திற்கு சென்ற யுவதி!

நஞ்சு அருந்தி விட்டு பொலிஸ் நிலையம் சென்ற யுவதி, தான் கொண்டு சென்ற கடிதத்தை பொலிசாரிடம் ஒப்படைத்து விட்டு மயங்கி விழுந்தார். அவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த பரபரப்பு சம்பவம் நேற்று (06) வியாழக்கிழமை நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.

நேற்று மதியம் யுவதியொருவர் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு பதிவு செய்ய சென்றுள்ளார். பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரிடம், தன்னிடமிருந்த மூன்று பக்க கடிதத்தை ஒப்படைத்துள்ளார். பொலிஸ் உத்தியோகத்தர் அதை வாசித்துக் கொண்டிருந்த போது, அந்த யுவதி மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக விரைந்து செயற்பட்ட பொலிசார், அவரை அவசர அம்பியூலன்ஸிற்கு தூக்கி சென்றபோது, வாயிலிருந்து நுரை வெளியேறியது. நச்சு திராவக மணமும் வீசியது.

இதையடுத்து, அவசர அம்பியூலன்ஸில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். தற்போது, தீவிர சிகிச்சை பிரிவில் யுவதி சிகிச்சை பெற்று வருகிறார்.