கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மனைவியே உணவில் விஷம் கலந்து கணவனை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள சுருளிபட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது27) லாரி டிரைவர். அவரது மனைவி கலைமணி (19) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது.
கடந்த மாதம் 8-ந் தேதி ஈஸ்வரன் திடீரென இறந்து போனார். குடிப்பழக்கம் உடைய ஈஸ்வரன் அதிக அளவு மது குடித்ததால் இறந்து விட்டதாக கலைமணி உறவினர்களிடம் கூறி அழுதார்.
கணவர் இறந்த பிறகு தனது குழந்தையை மாமனாரிடம் கொடுத்து விட்டு வீட்டில் இருந்த 3 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு கலைமணி தலைமறைவானார். அவரை உறவினர்கள் தேடி வந்தனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த அழகர்சாமி (வயது26) என்ற வாலிபருடன் பல இடங்களில் சுற்றிதிரிவது தெரிய வந்தது. இதனால் கலைமணி மீது மாமனார் தர்மருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இது குறித்து ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதோடு ஈஸ்வரனின் உடலை தோண்டி எடுக்கவும் கோரிக்கை விடுத்தார்.
அதன் பேரில் டி.எஸ்.பி. சீமைச்சாமி, தாசில்தார் உதயராணி, டாக்டர் அருண்குமார் ஆகியோர் முன்னிலையில் ஈஸ்வரன் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவர் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து கலைமணியிடம் நடத்திய விசாரணையில் தனக்கும், அழகர்சாமிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும் இதற்கு இடையூறாக கணவர் ஈஸ்வரன் இருந்தார் என்பதால் அவர் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்து வைத்ததாகவும் கூறினார்.
இதனையடுத்து போலீசார் கலைமணி, அவரது கள்ளக்காதலன் அழகர்சாமியை கைது செய்தனர்.