அபுதாபியிலிருந்து மனைவியின் மூன்றாவது பிரசவத்துக்காக கணவன் இந்தியா வந்த நிலையில் மற்ற இரண்டு குழந்தைகளையும் மீண்டும் அபுதாபிக்கே கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் உடுப்பி நகரை சேர்ந்தவர் முகமது ஷனிப். இவர் மனைவி ரிஷனா நிலோபிர்.
தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், ஷினிப் அபுதாபிக்கு சென்று பொறியாளராக வேலைக்கு சேர்ந்தார்.
இந்நிலையில் ரிஷினா மூன்றாம் முறையாக கர்ப்பமான நிலையில் கடந்த செப்டம்பர் 8ஆம் திகதி மனைவியின் பிரசவத்துக்காக ஷினிப் சொந்த ஊருக்கு வந்தார்.
ஊருக்கு வந்த ஷினிப் கடந்த செப்டம்பர் 18ஆம் திகதி தனது இரண்டு குழந்தைகளுக்கு ஐஸ் கிரீம் வாங்கி கொடுப்பதாக கூறி உடன் அழைத்து சென்றார்.
பின்னர் குழந்தைகளை நைசாக அழைத்து கொண்டு அபுதாபிக்கே சென்றுள்ளார். அங்கு சென்ற பிறகு மனைவிக்கு இது குறித்து தகவல் கொடுக்க அவர் அதிர்ந்துள்ளார்.
இதையடுத்து குடும்ப பிரச்சனையில் குழந்தைகளை ஷினிப் கடத்தி கொண்டு போய்விட்டதாக அவர் மனைவி ரிஷினா மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து ஆணைய அதிகாரிகள் இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் மற்றும் பொலிஸ் உதவியை நாடியுள்ளனர்.
இது குறித்து மனித உரிமைகள் ஆணைய பாதுகாப்பு தலைவர் ரவிந்தரநாத் கூறுகையில்,
இந்திய தூதரகம் குழந்தைகளை மீண்டும் கொண்டு வர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளோம்.
இல்லையெனில் குழந்தைகளின் தாயான ரிஷினாவின் வாழ்க்கைக்கு ஆபத்து ஏற்படும். ஷினிப் அபுதாபிக்கு போகும் போது குழந்தைகளின் ஆவணங்களையும் எடுத்து கொண்டு சென்றுவிட்டார்.
அவர் சென்ற பிறகே ரிஷினாவுக்கு மூன்றாவது குழந்தை பிறந்தது என கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்தியாவில் செயல்பட்டு வரும் சம்மன் கவுன்சிலிங் மையத்தின் தலைவர் லதீப் கூறுகையில், அபுதாபியில் உள்ள எங்கள் உறுப்பினர்கள் மூலம் ஷினிப்பிடம் இது குறித்து பேசினோம்.
ஆனால் அவர் எங்களுடன் ஒத்துழைக்க மறுக்கிறார். இது எங்கள் குடும்ப பிரச்சனை என்பதால் யாரும் தலையிட வேண்டாம் என கூறிவிட்டார் என தெரிவித்துள்ளார்