பாதுகாப்பு படையில் ரோபோர்ட் நாய்கள்: இந்தியா திட்டம்

மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்ட நாய்களை நீக்கிவிட்டு, அவைகளுக்கு பதிலாக ரோபோட் நாய்களை சேர்க்க இந்திய பாதுகாப்புப் படை திட்டமிட்டுள்ளது.

அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளின், அதிநவீன தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள ரோபோட் நாய்களே,  விமான நிலைய பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றன. இந்த நாய்கள், நிஜ நாய்களைப் போலவே வெடிகுண்டு மற்றும் போதைப் பொருள் இருக்கும் இடங்களை மிகத் துல்லியமாக மோப்பம் பிடித்து விடுகின்றன. அதேபோல், விமான நிலையத்தில் உள்ள பயணிகளின் பொருட்களை அதன் கண்கள் வழியாக எக்ஸ்-ரே எடுத்து நொடியில் சோதனை செய்கிறது.

இந்நிலையில், இந்திய விமான நிலைய பாதுகாப்பிற்காக, ஜெர்மன் ஷெப்பர்ட், லாப்ரடர்கள் மற்றும் பெல்ஜியன் மாலினோயிஸ் வகை நாய்களுக்கு பயிற்சியளித்து, மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது, நிஜ நாய்களுக்குப் பதிலாக ரோபோட் நாய்களைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. அத்துடன், அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விமான நிலையங்களில் சிடி ஸ்கேன், ஏஐ பாதுகாப்பு, வெடிகுண்டு டிடெக்டர்கள், சென்சார்கள் மற்றும் பயோமெட்ரிக் முறை எனப் பல பாதுகாப்பு முறைகளை அறிமுகம் செய்யவுள்ளதாக மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையின் கலந்தாய்வில் தெரிவிக்கப்பட்டது.