எம்.பிக்களுக்கு மகிந்த இலஞ்சம் கொடுக்க முனைந்தார் – மைத்திரி ஒப்புதல்

தான் நியமித்த பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டார் என்பதை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒப்புக் கொண்டுள்ளார்.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு அளிப்பதற்கு சிலர், 500 மில்லியன் ரூபா கேட்டார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களால் கோரப்பட்ட அதிகளவு விலையை செலுத்த முடியாததால் தான், மகிந்த ராஜபக்சவினால், பெரும்பான்மையை பெற முடியவில்லை.

இல்லாவிட்டால், அவரால் பெரும்பான்மையைப் பெற்றிருக்க முடியும். மகிந்த ராஜபக்ச 113 பேரின் பெரும்பான்மையை பெற்றி்ருந்தால், இந்தப் பிரச்சினை ஒன்றரை மாதங்களுக்கு இழுபட்டிருக்காது. எந்தவொரு அரசியல் நெருக்கடியும் ஏற்பட்டிருக்காது.

உச்சநீதிமன்றத்தின் முடிவு, இந்த அரசியல் நெருக்கடிக்கு முடிவு கட்டும். எனது முடிவுடன் உச்சநீதிமன்றம் இணங்கினால்,தேர்தல் நடத்தப்பட்டு பிரச்சினை தீர்க்கப்படும்.

நாடாளுமன்றக் கலைப்பை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாவிடின்,  நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்ற ஒருவரை பிரதமராக நியமிக்க இணங்குவேன்.

எனினும், ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக மீண்டும் நியமிக்கமாட்டேன், ” என்றும் அவர் தெரிவித்தார்.