நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவின் கட்டளையில் தான் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையில் சகல பாதுகாப்புடனும் தங்கியிருக்கிறார் என மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவர்,
பிரதமர் அலுவலகத்திற்குச் சென்று பார்த்தோம் அங்கும் மகிந்த ராஜபக்ச இல்லை. எனினும் அலரி மாளிகைக்குச் செல்லும் போது உள்ளே ஒருவர் இருக்கின்றார். அங்குள்ள மண்டபம் முழுமையாக வீணடிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் நீங்கள் பேசமாட்டீர்கள்.
எங்களைத் தவிர, வேறு யாரும் பேசமாட்டார்கள். அச்சமின்றி ரணில் விக்ரமசிங்க அங்கு எவ்வாறு இருப்பார் என்பதில் சிக்கல் உள்ளது.ரணில் விக்ரமசிங்கவிற்கு மகிந்த ராஜபக்ச ஒரு விடையத்தை கூறியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இராஜாங்க அமைச்சர் ஒரு விடையத்தை என்னிடம் கூறினார்.
“ரணில் நீங்கள் அங்கே இருங்கள் பிரச்சினை இல்லை” என்று கூறினாராம். மகிந்த ராஜபக்சவின் அனுமதி மற்றும் கட்டளையிலேயே ரணில் விக்ரமசிங்க அனைத்து பாதுகாப்புக்களுடன் அலரி மாளிகையில் தங்கியுள்ளார் என்று நாங்கள் நினைக்கிறோம்.
இதேவேளை, பிரதமர் தொடர்பிலும் அரசாங்கம் தொடர்பிலும் நாங்கள் கவனம் செலுத்தவில்லை. ஜனநாயகத்தை பாதுகாக்கும் வரையறையிலேயே எமது நிலைப்பாடு காணப்படுகிறது. அதை எதிர்வரும் நாட்களில் காண்பீர்கள். அரசாங்கத்தை அமைப்பது பெரும்பான்மையுள்ள கட்சியின் வேலை அது எங்களின் வேலையல்ல என்றார்.