வட பகுதியில் மீண்டும் கொரில்லா தாக்குதல்கள் ஆரம்பமா?

விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் தொடர்ந்தும் பல்வேறு நாடுகளில் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதாக பயங்கரவாதம் தொடர்பான நிபுணர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசாங்க ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் இது தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

இதன்படி அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் விடுதலைப்புலிகளின் செயற்பாடு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு வடக்குகிழக்கில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களை நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும், தடையை நீக்கி, சுதந்திரமாக்கியதும் ஒரு காரணம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் வடக்கு, கிழக்கை பொறுத்த வரையில் அங்கு தற்போது 1980 ஆம் ஆண்டு காலப்பகுதியின் நிலவரங்களே ஏற்பட்டு வருகின்றன.

இது நீடித்தால் வடக்கிலும் கிழக்கிலும் மீண்டும் குழப்ப நிலை ஏற்படும். தாக்கிவிடும் ஓடும் செயற்பாடுகள் இடம்பெறுவதை தடுக்க முடியாது.

எனவே படைத்தரப்பு இந்த விடயம் தொடர்பாக பொதுமக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தெளிவூட்ட வேண்டும் என்று ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இரண்டு பொலிஸார் கொல்லப்பட்டமைக்கு பின்னால் முன்னாள் போராளிகள் இருப்பதாக தற்போதைக்கு கூறுவது முடியாது. எனினும் புனர்வாழ்வளிக்கப்படாத முன்னாள் போராளிகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

நல்லாட்சி அரசாங்கம் இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாதத்துக்கு உதவிய குழுக்களின் தடையை நீக்கியிருப்பதன் காரணமாக இந்த போராளிகள் மீண்டும் செயற்பட தலைப்படலாம் என்றும் குணரட்ன எதிர்வு கூறியுள்ளார்.

அண்மையில் வடக்கு கிழக்கில் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்டமையானது தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் போராட்டத்துக்கு ஆதரவை பெருப்பிக்கும் நடவடிக்கையாகவும் அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.