புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் தேவைக்கு இணங்க, புதிய அரசியலமைப்பொன்றை கொண்டுவருவதற்காகவே, ரணில் தரப்பினர் மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சிக்கின்றனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மொரட்டுவயில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “முப்பது வருடங்களாக நாட்டில் பாரிய யுத்தம் இடம்பெற்றது. இதனால், நாடு பாரிய சவால்களுக்கு உள்ளாகியது.
ஆனால், அன்று நாட்டில் ஸ்தீரமான அரசாங்கங்கள் இருந்தன. இதனாலேயே அபிவிருத்தியோடு, யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரவும் முடியுமாக இருந்தது.
எனினும், இன்று ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் கொண்டுவந்த 19 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக நாடு எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை காணக்கூடியதாக இருக்கிறது.
இதனால், நாட்டில் இன்று பிரதமரோ அமைச்சரவையோ இல்லாமல் போயுள்ளது. நாடு நன்றாக இயங்கிக் கொண்டிருந்தவேளையில், பொய் பிரசாரங்களை மேற்கொண்டு இனவாதத்தை பரப்பி, மஹிந்தவை தோற்கடிக்கச் செய்த சூழ்ச்சியிலேயே இந்த நாடு இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டுவரவே முயற்சிகளை மேற்கொண்டது. இதில், நாடாளுமன்றால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியொருவரே முன்மொழியப்பட்டிருந்தார்.
நாடாளுமன்றுக்கு அடுத்தபடியாக இரண்டாவது சபையொன்றும் கொண்டுவரப்படவிருந்தது. இந்த இரண்டு சபையினாலேயே ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார்.
அடுத்ததாக, நாடாளுமன்றின் அதிகாரமும் வரையறுக்கப்பட்டிருந்தது. இவற்றுடன் வடக்கு – கிழக்கை இணைத்து ஒரு முதல்வரின் கீழ் நிர்வகிக்கவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
தேசிய பாதுகாப்பு என்பது ஒரு நாட்டுக்கு முக்கியமான ஒன்றாகும். 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்வரை இந்த நாட்டில், எந்தவொரு பிரச்சினையும் இருக்கவில்லை.
இந்த அரசாங்கம் வந்தபிறகு, இராணுவ புலனாய்வுப் பிரிவினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பொய்க் குற்றச்சாட்டுக்களால் அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
இவ்வாறான சம்பவங்களின் விளைவாகவே, வவுணதீவு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது சாதாரண ஒரு விடயமல்ல. இந்தநிலையில், மீண்டும் ரணில் தரப்பினர் ஆட்சிக்கு வர முயற்சிக்கிறார்கள்.
சர்வதேச சக்திகள், பிரிவினைவாதிகள், புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் தேவைக்கு இணங்க, புதிய அரசியலமைப்பைக் கொண்டுவரவே இவர்கள் முயற்சிக்கிறார்கள்.
இது பாரதூரமான ஒன்றாகும்“ என தெரிவித்துள்ளார்.