கன்னடத்தில் உக்ரம் படத்தின் மூலம் புகழ் பெற்றவர் கன்னட இயக்குநர் பிரசாந்த் நீல். இவர் தற்போது, கன்னட நடிகர் யாஷ் நாயகனாக நடிக்கும் ‘கே.ஜி.எப்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக், அச்யுத் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். புவன் கவுடா ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு குரவிபசூரூர் இசையமைப்பாளராகவும், ஸ்ரீகாந்த் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். ஹோம்பேல் பிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில், விஜய் கிரகந்துர் தயாரித்துள்ள, இந்த படம் பாகுபலி, 2.ஓ படங்களின் வரிசையில், கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன், இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. மேலும் இந்த படத்தை 5 மொழிகளிலும் வருகிற டிசம்பர் 21ம் தேதி வெளியிட உள்ளனர். தமிழில் விஷால் வெளியிடும், இந்த படத்தின் கதை மும்பையில் நடப்பது போல இருப்பதால், படத்தில் இந்தி வசனங்கள் மற்றும் பாடல் வரிகள் அதிகம் உள்ளன. ஆனால் மொழி மாற்றம் செய்யும் போதும் முக்கியமான வசனங்கள் மற்றும் பாடல் வரிகள் இந்தியிலேயே இடம் பெற்றிருக்கும் வகையில் வைத்திருக்கிறார்கள்.
ஆனால் இந்த படத்தை தமிழில் வெளியிடும் விஷால், மற்ற மொழிகளில் இந்தியில் இருந்தாலும் தமிழகத்தில் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்று சொல்லி விட்ட நிலையில், தமிழில் மட்டும் அனைத்து வசனங்களும் தமிழில் இடம் பெற்றுள்ளன. இதனால் தற்போது கர்நாடகத்தில் சிக்கல் ஏற்பட்டுவிட்டதாம். தமிழில் மட்டும் தமிழ் பேசுகிறது, கன்னட படத்தில் இந்தி வருகிறது. இங்கும் அவற்றை கன்னடத்தில் மாற்ற வேண்டியதுதானே என்று கேட்டு கன்னட அமைப்புகள் சிக்கலைக் கிளப்பியிருக்கின்றனவாம். அவர்களைச் சமாதானம் செய்து படத்தை வெளியிடும் வேலைகளில் படக்குழு இறங்கியிருக்கிறதாம்.