கடந்த 2007இல் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சக ஊடகவியலாளர் இராமச்சந்திரனின் தாயார் சுப்பிரமணியம் அம்பிகை துன்னாலையில் நேற்று காலமாகியுள்ளார்.
மகனிற்காக நீதி கோரி போராடியவாறே நேற்று காலமாகியுள்ளதாகவும், அவருக்கு யாழ்.ஊடக அமையம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
இது குறித்து யாழ்.ஊடக அமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
தமது இறுதிக் காலங்களில், மரணம் சம்பவிக்கும் வரை காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனான இராமச்சந்திரனை தேடிக்கண்டறிவதிலும் அவருக்கு நீதி பெற்றுக்கொள்வதிலும் தாயும் தந்தையும் சேர்ந்து விடாமுயற்சியுடன் பாடுபட்டு வந்தனர்.
இராமச்சந்திரனின் தந்தையார் சுப்பிரமணியம் காலமாகி ஒரு மாதமே ஆன நிலையில் நேற்று தாயாரும் உயிரிழந்துள்ளார்.
வயோதிப வயதிலும் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன் பற்றி தகவல்களை பகிர்ந்து கொள்வதில் என்றுமே பின்னின்றதில்லை. தேடி வரும் ஊடக செயற்பாட்டளர்களுடன் மகனது விடுதலைக்காக நீண்ட பயணத்தை செய்துமிருக்கின்றார்கள்.
மகன் காணாமல் ஆக்கப்பட்ட நாளில் இருந்து அவரை கண்டறிய தேடி அலைந்து பதிலேதும் கிடைக்காமலேயே இவர்கள் இந்த மண்ணிலிருந்து பிரிந்துள்ளனர்.
தாங்கள் இறப்பதற்குள் காணாமல் ஆக்கப்பட்ட மகனைப் பார்க்க வேண்டும் என்றும் , தமது இறுதிக்கிரியைகளை தமது மகனான இராமச்சந்திரனே முன்னின்று நடத்தவேண்டுமெனவும் பல தடவை பேசியிருக்கின்றார்கள்.
மகனிற்கான சேமிப்பை தமது மரணத்தின் முன்னராக அவரிடம் கையளிக்கவேண்டுமென்ற அவர்களது கனவு கடைசிவரை மெய்க்காது போயேவிட்டது.
தமிழர் மக்களது துன்பியல் வாழ்வில் காணாமல் ஆக்கப்பட்ட தமது குடும்ப உறவுகளை தேடிக்கொண்டிருக்கின்ற போதே இந்த உலகை விட்டு பிரிந்துவிடுவது தொடர்கின்றது. அதனுள் ஒன்றாக காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் இராமசந்திரனின் தந்தை தாயினதும் மரணமும் அமைந்திருக்கின்றது.
2007ம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் வடமராட்சியின் துன்னாலை கலிகை சந்தி இலங்கை இராணுவ படைமுகாமில் வைத்து இராமச்சந்திரன் காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.
தடுத்து வைக்கப்பட்டிருந்த சூழலில் ஒரிரு நாட்கள் அவர் தொலைபேசி செயற்பட்டுக் கொண்டிருந்தேயிருந்தது. விசாரணையொன்றிற்காக தான் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையினை இருவரும் அப்போது பகிர்ந்துள்ளனர்.
யாழ்.தினக்குரல் ,வலம்புரி நாளிதழ்களது பிரதேச செய்தியாளராக பணியாற்றிக் கொண்டிருந்த இராமச்சந்திரன் தொடர்பில் இன்று வரை தகவல்கள் கிடைக்காமல் போயுள்ளது.