2 மகள்களை கொலை செய்த தந்தையின் அதிர்ச்சி வாக்குமூலம்!

தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக சொந்த குழந்தைகளை கொலை செய்து தலைமறைவான தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கோவையில் நீலிக்கோனார் வீதியைச் சேர்ந்த பத்மநாபன் (45) என்பவர் சௌரிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரதிநிதியாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் இவரது மகள்களான ஹேமவர்ஷினி (15), ஸ்ரீஜா (8) ஆகியோரை கடந்த 6 ஆம் திகதி கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.

சம்பவத்தை அடுத்து கொலை வழக்குப்பதிவு செய்த சிங்காநல்லூர் பொலிசார் 3 தனிப் படைகள் அமைத்து பத்பநாபனைத் தேடி வந்தனர். இந்நிலையில் குடிபோதையில் பீளமேடு பகுதியில் சுற்றித் திரிந்த பத்மநாபனை, தனிப்படை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், மனைவி செல்வராணி உடல்நலம் பாதிக்கப்பட்டவர்.

நான் குடி பழக்கத்துக்கு ஆளானேன். அதை செல்வராணி கண்டித்ததால், இருவருக்குமிடையே கடந்த 2 ஆண்டுகளாக சண்டை நடைபெற்று வருகிறது.

விரக்தியடைந்த நான் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் இருந்தேன். 6 ஆம் திகதி இரவு இருவருக்கும் இடையே சண்டை நடந்து முடிந்து, செல்வராணி தாய் வீட்டுக்குச் சென்றதும், குழந்தைகளைக் கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன்.

பின்னர் இருவரையும் கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன். தற்கொலை செய்து கொள்ள பயமாக இருந்ததால், செல்போனை அணைத்து வைத்து விட்டு மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியில் சென்று விட்டேன் என பத்பநாபன் வாக்குமூலம் அளித்துள்ளார்.