ஸ்பெயின் நாட்டில் மட்டும் விளையாடாமல் இத்தாலிக்கும் வாருங்கள் என நட்சத்திர வீரர் ரொனால்டோ அர்ஜெண்டினா வீரர் மெஸ்சிக்கு சவால் விடுத்துள்ளார்.
கால்பந்து உலகில் ஜாம்பவான் வீரர்களாக மெஸ்சி, ரொனால்டோ ஆகிய இருவரும் திகழ்கின்றனர். அர்ஜெண்டினாவைச் சேர்ந்த மெஸ்சி பார்சிலோனா அணிக்காகவும், போர்த்துகலைச் சேர்ந்த ரொனால்டோ இத்தாலியின் யுவாண்டஸ் அணிக்காகவும் விளையாடி வருகின்றனர்.
மெஸ்சி ஸ்பெயின் நாட்டில் மட்டுமே தற்போது விளையாடி வரும் நிலையில், இத்தாலிக்கு வந்து விளையாடுங்கள் என ரொனால்டோ சவால் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘ஒருநாள் மெஸ்சி இத்தாலிக்கு வருவதை நான் கட்டாயம் விரும்புகிறேன். என்னுடைய சவாலை அவர் ஏற்பார் என்று நம்புகிறேன். ஆனால், ஸ்பெயினில் அவர் மகிழ்ச்சியாக இருந்தால் அதற்கு நான் மதிப்பு அளிக்கிறேன்.
அவர் வாழ்நாள் முழுவதும் பார்சிலோனாவிற்காக விளையாடினால், நான் அவரை இழக்கவில்லை. அவர் தான் என்னை இழக்கிறார். நான் இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, போர்த்துக்கலில் விளையாடியுள்ளேன்.
அவர் இன்னும் ஸ்பெயினிலேயே இருக்கிறார். ஒருவேளை அவருக்கு நான் தேவைப்பட்டால், எனக்கு வாழ்க்கை சவாலாக இருக்கும். அதை நான் விரும்புகிறேன். ரசிகர்களை மகிழ்ச்சியாக மாற்ற விரும்புகிறேன்.
மெஸ்சி மிகவும் சிறந்த வீரர் மற்றும் சிறந்த மனிதர். ஆனால், இங்கே நான் எதையும் தவற விடவில்லை. இது என்னுடைய புதிய வாழ்க்கை. நான் மகிழ்ச்சியாக உள்ளேன்.
என்னுடைய வசதியான இடத்தை விட்டு, இத்தாலியில் இந்த சவாலை எடுத்துள்ளேன். இங்கு எல்லாம் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. நான் இன்னும் வியக்கத்தக்க வீரர்தான் என்பதை நிரூபித்திருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.