இந்திய அணியில் புஜாராவை அவுட்டாக்குவது மிகவும் கடினமாக இருக்கிறது என்று அவுஸ்திரேலியா அணியின் தலைவர் டிம் பெய்ன் கூறியுள்ளார்.
இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் இரண்டு இன்னிங்ஸிலும் இந்திய வீரர் புஜாரா சிறப்பான ஆட்டத்தை கொடுத்தார்.
முதல் இன்னிங்ஸில் சதமடித்த அவர் இரண்டாவது இன்னிங்ஸில் 71 ஓட்டங்கள் எடுத்தார். இவரின் இந்த ஓட்டம் தான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஆகும்.
இந்நிலையில் அவுஸ்திரேலியா அணியின் தலைவர் டிம் பெய், எங்கள் அணியின் பின்வரிசை வீரர்கள் கடைசி வரை போராடியது பெருமையாக இருக்கிறது.
இந்திய அணி இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள். நாங்கள் வெற்றி பெற்றிருக்கலாம் என்பதில் மாற்று கருத்து இல்லை. இருப்பினும் நானும் ஷான் மார்ஷும் டிராவிஸ் ஹெட்டும் பெரிய இன்னிங்ஸை ஆடியிருக்க வேண்டும்.
இந்திய அணியில் புஜாரா ஆடியதை போன்ற இன்னிங்ஸை நாங்கள் ஆடவில்லை. இந்த போட்டியில் புஜாராவின் பேட்டிங் மட்டும் தான் இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் வித்தியாசமாக அமைந்தது.
போட்டியின் முடிவை தீர்மானித்தது அவரது பேட்டிங்தான். புஜாராவை வீழ்த்துவது உண்மையாகவே மிகவும் கடினமாக உள்ளது. இந்த போட்டியில் தோற்றிருந்தாலும் டெஸ்ட் தொடரை நாங்கள் வெல்வோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.