கல்வாவ – கலங்குட்டிய பிரதேசத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த போலி ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை பெற்றுக்கொடுக்கும் நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டு, போலி ஆவணங்களுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கலங்குட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய நபரொருவரே இவ்வாறு நேற்று கல்வாவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு குறித்த பகுதியில் சட்டவிரோமான முறையில் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு பல இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கல்வாவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்காமை நேற்றுமுன்தினம் பகல் 2.30 மணியளவில் குறித்த நிலையத்தை கல்வாவ பொலிஸார் முற்றுகையிட்டனர்.
அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த ஆணொருவர் கைதுசெய்யப்பட்டதோடு, போலி சாரதி அனுமதிபத்திரம் 42, பல அமைச்சக போலி இறப்பர் முத்திரைகள், உயர் மற்றும் சாதாரண தர பரீட்சை சான்றிதழ்களின் அட்டை முகப்பு, மரண சான்றிதழ்கள், பிறப்பு சான்றிதழ்கள் 7, மண் கல் அகழ்வு அனுமதிபத்திரம் 14, வாகன இறக்குமதி அனுமதிபத்திரம் உள்ளிட்ட இலத்திரனிய சாதனங்கள் பலரும் கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து குறித்த சந்தேகநபரை கைதுசெய்துள்ள கல்வாவ பொலிஸார் அவரை ககிராவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது நீதவான் அவரை பொலிஸ் காவலில் எடுத்து விசாரணைக்குட்படுத்த உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.