இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம்! ரணிலை ஏற்றுக் கொண்ட மைத்திரி

ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்தள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று ஜனாதிபதி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரபலங்கள் சிலருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ள நிலையில் ஜனாதிபதி தனது இணக்கத்தை வெளியிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இல்லாமை, இரண்டு சந்தர்ப்பங்களில் நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தமை மற்றும் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு ரணில் விக்ரமசிங்க கிடைத்துள்ளமை ஆகிய விடயங்கள் அடிப்படையில் இந்த இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணைகள் இரண்டில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்தமை மற்றும் உயர் நீதிமன்றத்தில் அவரது பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவைக்கு அதிகாரம் இல்லை என இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதற்கமைய ஐக்கிய தேசிய கட்சி தற்போது வரையில் மாற்று வழி இல்லாமல் உள்ள நிலையில் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி நாட்டின் சட்டரீதியான பிரதமராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை உள்ளதாக ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சி யோசனை செய்துள்ள பிரதமர், ரணில் விக்ரமசிங்க எனவும், அதில் மாற்றமில்லை எனவும் அவர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதற்கமைய அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, “நான் கூறுவது உங்களுக்கு புரியவில்லை என்றால், நீங்கள் கேட்பது ரணில் என்றால், நான் நியமிக்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க மாட்டேன் என ஜனாதிபதி பல தடவைகள் அறிவித்திருந்தார்.

இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக கொண்டு வந்த பிரேரணை 117 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

ரணிலுக்கு ஆதரவான பிரேரணையை ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ கொண்டு வந்திருந்தார்.

ரணில் – மைத்திரிக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து, சஜித் பிரேமதாஸவை பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி பல தடவைகள் அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.