“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” ஏற்பாட்டில், மடத்துவெளி முகப்பில் இருந்து தொடரும் “மின்விளக்குப் பொருத்தும்” நடவடிக்கைகள்… (படங்கள் & வீடியோ)
புங்குடுதீவு மடத்துவெளி முகப்பில் (புங்குடுதீவு ஆரம்பமான மடத்துத்துறையில்) உள்ள பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக, வடமாகாண ஆளுநரினால் ஆரம்பிக்கப்பட்ட “மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை”, நேற்றையதினம் ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்களினால் வயலூர் முருகன் ஆலயம் தாண்டி, கமலாம்பிகை வித்தியாலம் வரை மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை தொடரப்பட்டு உள்ளது.
ஆளுநர் ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தின் போது “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் தலைவர்” சொக்கலிங்கம் ரஞ்சன், தீவகத்தின் பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பில் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அப்பகுதியில் விவசாய நடவடிக்கைகளுக்கான குளங்கள் புனரமைக்கப்படல் வேண்டும், மக்களின் பாதுகாப்பு கருதி வீதி விளக்குகள் பொருத்தப்படல் வேண்டும், தீவகத்தில் கல்வித் தேவைக்காக ஆசிரியர்களின் ஆளணியினை அதிகரிக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை விடுத்திருந்தார்.
அது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட கூட்டத்தினை ஒருவாரத்துக்கு (05.12) முன்னர் வேலணை பிரதேச செயலகத்தில் கூட்டிய ஆளுநர், அன்றையதினமே வீதி விளக்கு பொருத்தும் பணிகளை புங்குடுதீவு மடத்துவெளி முகப்புப் பகுதியில் ஆரம்பித்து வைத்தார்.
இதன் அடுத்தகட்டமாக நேற்றையதினம் அப்பகுதிக்கு விஜயம் செய்த வடமாகாண ஆளுநரின் செயலாளர் திரு.இளங்கோவன் அவர்களின் மேற்பார்வையில் “மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை” தொடரப்பட்டு வயலூர் முருகன் ஆலயம் தாண்டி, கமலாம்பிகை வித்தியாலயம் வரை மின்விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளது. அடுத்தடுத்த நாட்களில் இந்நடவடிக்கை தொடர்ந்து, ஊரதீவு பகுதி வீதிகளுக்கும் மின்விளக்குகள் பொருத்தப்பட இருக்கிறது.
மேற்படி மடத்துவெளி, ஊரதீவு முக்கிய வீதிக்கான “மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கைக்கான, மின்விளக்கு செலவுகளை” “மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய” சுவிஸ் நிர்வாக சபை சார்பாக, “மடத்துவெளி, ஊரதீவு” மக்கள் சிலரிடம் இருந்து பெற்றுத் தருவதாகவும், இதனை “சுவிஸ் ஒன்றியம்” செய்து தர வேண்டுமெனவும் ஆளுநர் முன்னிலையிலேயே கோரிக்கை வைத்து, பொறுப்பேற்றுக் கொண்ட திரு.சண்முகம் (சூரிச்), திரு.கைலாசநாதன் (குழந்தை), திரு.சௌந்தரராஜன் ஆகியோர் அதுக்குரிய குறிப்பிட்ட நிதியையும் உடனடியாக தந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது..
தகவல் & படங்கள்…. -வடமாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு.. மற்றும் “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம்”