பிரதமர் மோடியை இரண்டாவது முறையாக ஆட்சிக்கு கொண்டு வந்தால் அது மக்களுக்கு பெரும் பேரழிவை ஏற்படுத்தும். நாட்டின் ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் பாஜகவின் தலைவர்களில் ஒருவருமான யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.
ஐந்து மாநில தேர்தல் முடிவுகளையொட்டி நேற்று பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேக பேட்டியளித்த சின்ஹா மோடியை கடுமையாகச் சாடினார் அப்போது அவர் கூறியதாவது:
“அடுத்து மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைக்காமல் தடுப்பது நாட்டின் வளரச்சிக்கு மிக முக்கியம். காங்கிரஸ் மற்றும் அனைத்து எதிர்கட்சிகளும் சேர்ந்து தேர்தலுக்கு முன்பே மெகாக் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்க வேண்டும். அப்போதுதான் பாஜகவிற்கு எதிரான வாக்குகள் சிதறாமல் கூட்டணிக் கட்சிக்குக் கிடைக்கும்.
எல்லா பிராந்தியக் கட்சிகளும் தேர்தலுக்கு முன்பே தங்களுடைய கருத்து வேறுபாடுகளை மறந்து காங்கிரசுடன் இணைந்து தேர்தலுக்கு முன்பே கூட்டணியை பலமாக அமைக்க வேண்டும்.
தேர்தலில் அதிக இடங்களைப் பிடித்த கட்சியையே ஜனாதிபதி பதவி ஏற்க அழைப்பார். பாஜக 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றிருந்தால் அந்த வாய்ப்பு தனிக் கட்சியான பாஜகவிற்கே செல்லும்.
ஆனால், தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைத்து காங்கிரஸ் தலைமையில் தேர்தலைச் சந்தித்து இருந்தால் காங்கிரஸ் கட்சியே ஆட்சி அமைக்க அழைக்கப்படும்.
கூட்டணி இல்லாமல் பிராந்திய கட்சிகளும், காங்கிரசும் பாஜகவை விட அதிக தொகுதிகள் எடுத்து இருந்தாலும் அது கணக்கில் கொள்ளப்படாமல் போய்விடும். அதனால் மெகா கூட்டணி அமைத்து காங்கிரஸ் தலைமையில் தேர்தலைச் சந்திப்பதே மோடியின் ஆட்சியை ஒழிக்க எடுக்கும் புத்திசாலித்தனமான முடிவாகும்” எனக் கூறினார்.
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பற்றிக் கூறும்போது, ” மோடியின் மாயாஜால கனவுகளும் கோட்பாடுகளும் தரை மட்டமாக அழிந்திருக்கிறது. வரும் தேர்தலில் எதிர்கட்சிகள் ஒரு அணியில் சேர இது வழிவகுத்து இருக்கிறது” என்றார்.
பிரதமர் மோடி தலைமயிலான ஆட்சி குறித்து கூறுகையில், மீண்டும் மோடி பிரதமரானால் அது மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும், நாட்டில் எங்கும் ஜனநாயகத்தைப் பார்க்க முடியாது. திரும்பவும் ராமர் கோயில் விவகாரத்தை வைத்து அரசியல் நடக்கும் என்றார்.