கூகுளில் முட்டாள் என தேடினால் ட்ரம்ப் வருவது ஏன்? – சுந்தர் பிச்சை விளக்கம்

அமெரிக்க ஜனநாயக கட்சியை சேர்ந்த ஒருவர் கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையிடம் எழுப்பிய கேள்வி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சை விளக்கம் அளித்துள்ளார்.

சீனாவில் புதிய தேடுபொறியை துவங்க கூகுள் திட்டமிட்டுள்ளதாகவும், அமெரிக்காவில் அரசியல் கட்சிகளிடம் பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாகவும் கூகுள் நிறுவனம் மீது புகார் எழுந்தது. இதனையடுத்து அமெரிக்க நாடாளுமன்றம் விசாரணை குழு முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ள சுந்தர் பிச்சை, அரசியல் பாரபட்சத்துடன் கூகுள் ஒருபோதும் செயல்பட்டது இல்லை. அனைத்து விதமான கருத்துக்களையும் பதிவு செய்யும் தளமாகவே கூகுள் இயங்கி வருகிறது என்று கூறினார்.

கூகுளில் முட்டாள் என்று தேடினால் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பின் படம் தோன்றுவதன் மூலம் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. உலகின் பிரபல தேடுபொறி தளமான கூகுளில் தேடல் மூலம் கிடைக்கும் பதில்களுக்கு பெரிய அளவின் நம்பகத்தன்மை உள்ளது. அதே சமயம், தேடலுக்கு கூகுள் உபயோகப்படுத்தும் ‘அல்காரிதம்’ தகவல்களை ஒழுங்கமைக்கும் விதத்தில் குறைபாடுகள் உள்ளது.

இந்நிலையில், ஆங்கிலத்தில் ‘முட்டாள்’ (idiot) என்று படப்பிரிவில் தேடினால் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் படம் தோன்றுவது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில்,

‘கூகுள் நிறுவனம் எதையும் உள்நோக்கத்துடன் செய்யவில்லை. தற்போது புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகளுடன் ஒப்பிட்டு, அதன் அதிகப்படியான பயன்பாடு, மக்களின் பதிவுகள் ஆகியவற்றை கணக்கில் கொண்டே தேடுபொறியில் வார்த்தைகளை சேர்த்துள்ளோம். உடனடியாக சீன தேடுபொறியை தொடங்கும் திட்டம் ஏதும் இல்லை. வெறுப்புணர்வு மற்றும் வன்முறையை தூண்டும் கருத்துக்கள், பேச்சுக்களை தணிக்கை செய்தே கூகுள் பதிவிடுகிறது’ என தெரிவித்துள்ளார்.