ஆட்சியமைப்பதற்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தமது தரப்பு ஆதரவுகோராது என்று மகிந்த, மைத்திரி கூட்டணி அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன மேற்கண்டவாறு கூறினார்.
“ஐக்கிய தேசியக்கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையே இரகசிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு பெப்ரவரி 04ஆம் திகதிக்குள் சமஷ்டித் தீர்வு, போர்க்குற்ற விசாரணை உள்ளிட்ட விடயங்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த ரகசிய உடன்படிக்கையின் படியே இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது ரணில் விக்ரமசிங்கவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வடக்கு இல்லாமல்போகும். ஐக்கிய தேசியக் கட்சிக்கு தெற்கு இல்லாமல்போகும். மேற்படி உடன்படிக்கையின் இறுதி பிரதிபலன் இவ்வாறுதான் அமையப்போகின்றது. அதற்கேற்றவாறு எமது அரசியல் வியூகம் அமையும்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சரியென உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தால் தேர்தலுக்கு தயாராவோம். பிழையென தீர்ப்பளித்தால் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைக்க முற்படமாட்டோம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.
முன்னதாக ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க வேண்டாம் என கூட்டமைப்பிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அதற்கு மறுப்பு வெளியிட்ட கூட்டமைப்பு நாடாளுமன்றில் ரணிலுக்கு ஆதரவாக வாக்களித்திருந்மையும் குறிப்பிடத்தக்கது.