இலங்கையை மிரட்டப் போகும் சூறாவளி…? மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை…..!!

இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டுள்ள தாழமுக்கம் அடுத்த 24 மணித்தியாலங்களில் பாரிய சூறாவளியாக மாற்றமடையும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மற்றும் இந்திய வானிலை அவதான மையங்கள் எச்சரித்துள்ளன.

இதுதொடர்பில் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்  வெளியிடும் போது ;

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய தாழமுக்கம் 2018 டிசம்பர் 13ஆம் திகதி காலை 05.30 மணிக்கு திருகோணமலைக்கு கிழக்கு- தென்கிழக்காக அண்ணளவாக 850 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 6.5N, கிழக்கு நெடுங்கோடு 88.7E இற்கு அண்மையில் நிலை கொண்டுள்ளது.இத் தொகுதி வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து ஒரு ஆழமான தாழமுக்கமாக விருத்தியடைவதுடன்

தொடர்ந்து வரும் 24 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக உருவாகக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.மீனவ சமூகமும் கடலில் பயணம் செய்வோரும் இவ்விடயம் தொடர்பாகவும் வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் வழங்கப்படும் ஆலோசனைகள் குறித்தும் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடுவதுடன் ஓரளவு குளிரான வானிலையும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்  வெளியிடும் போது;

“தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது சென்னைக்கு தென் கிழக்கே 1170 கி.மீ.தொலைவில் நிலைகொண்டுள்ளது.

மேலும் இது இன்று இரவுக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். நாளை இது புயலாக வலுப்பெற்று தற்போதைய நிலைப்படி வட தமிழக கடற்கரைப்பகுதி, தெற்கு ஆந்திரா நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக டிச. 15, 16 தேதிகளில் வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றானது மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ.வேகத்தில் வீசக்கூடும். ஓரிரு இடங்களில் சில நேரம் கனமழையும் பெய்யக்கூடும். மீனவர்கள் டிச. 15, 16 ஆகிய தேதிகளில் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள மத்திய மேற்கு கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தற்போது உள்ள நிலையில் ஓரிரு இடங்களில் கனமழையை எதிர்பார்க்கிறோம். இது 1120 கி.மீ. தொலைவில் ஆழ்கடலில் உள்ளது. நகர்ந்து வரும் நிலையில் மாற்றங்கள் உள்ளதால் தெளிவாக எங்கு கரையைக் கடக்கும் என்று கூறமுடியாது.”எவ்வாறாயினும், ஏற்கனவே வங்கக் கடலில் உருவான கஜ சூறாவளியின் அழிவுத் தாக்கம் தமிழகத்தில் இன்னும் சீராகாத நிலையில் இந்த புதிய புயல் உருவாகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.