28 ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கிறேன்: டுவிட்டரில் இணைந்த முக்கிய பிரபலம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் சமூக வலைதளமான டுவிட்டர் பக்கத்தில் இணைந்துள்ளார்.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் விடுதலைக்காக அவரது தாயார் அற்புதம்மாள் தொடர்ந்து போராடி வருகிறார்.

முதல்வர், ஆளுநரைச் சந்திப்பது போராட்டங்களை முன்னெடுப்பது என தமது மகனின் விடுதலைக்காகப் போராடி வருகிறார். போராட்டத்தின் ஒருபகுதியாக பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் டுவிட்டர் பக்கத்தில் இணைந்துள்ளார்.

பேரறிவாளன் விடுதலைக்கு வலு சேர்க்கும் வகையில் டுவிட்டரில் தொடர்ந்து குரல்கொடுக்க உள்ளார்.

இதற்காக, @AmmalArputham என்ற பெயரில் டுவிட்டரில் இணைந்துள்ள அவர் பக்கத்தில் , “நான் ஒரு அப்பாவி பையனின் அம்மா. என்னிடம் இருந்து அவனை 28 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து பறித்து விட்டார்கள்.

அப்போது அவனுக்கு 19 வயது. அப்போது அவன் பின்னால் ஓட ஆரம்பித்தேன். தற்போதும் ஓடிக் கொண்டிருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரின் விடுதலைக் குறித்து தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு அண்மையில் தீர்ப்பளித்தது.

இதையடுத்து, செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடியது.

கூட்டத்தின் முடிவில் சிறை அதிகாரிகளின் பரிந்துரைகள், வழக்கில் இத்தனை காலமாக நிகழ்ந்தவை உள்ளிட்டவை அடங்கிய கோப்புகள், அமைச்சரவையின் தீர்மானம், சட்டவிதி 161-ன் படியிலான கருணை மனு ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு, தமிழக ஆளுநரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் 7 பேர் விடுதலைத் தொடர்பாக, மத்திய உள்விவகாரத்துறை அமைச்சகத்திடம் ஆளுநர் கருத்து கேட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

ஆனால் உறுதியான முடிவுகள் ஏதும் எடுக்கப்படாமல் 7 பேர் விடுதலை காலம்தாழ்த்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.