நடிகர் சண்முகராஜன் மீது பொய்யான பாலியல் புகார் கொடுத்த நடிகை ராணி, மன்னிப்பு கேட்கும் வரை திரைப்படங்கள் மற்றும் டிவி தொடர்களில் நடிக்க தடை விதிப்பதாக நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழில் வில்லுப்பாட்டுக்காரன் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ராணி. தொடர்ந்து காதல் கோட்டை, ஜெமினி ஆகிய படங்களில் பாடல்களுக்கு நடனமாடியுள்ளார். ஜெமினி படத்தில், ‘ஓ போடு’ என்ற பாடலுக்கு நடனமாடி மிகவும் பிரபலமடைந்த இவர், இப்போது பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நந்தினி சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியலில், இவருக்கு கணவராக, விருமாண்டி, சிவாஜி, சண்டக்கோழி உள்ளிட்ட படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த சண்முகராஜன் நடித்து வந்தார்.
இந்நிலையில், நடிகர் சண்முகராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ராணி, கடந்த அக்டோபர் மாதம் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் தொலைக்காட்சி சீரியல் படப்பிடிப்பின்போது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதை தன் கணவரிடம் சொன்னதால் சண்முகராஜன் தன்னை தாக்கியதாகவும், நடிகை ராணி தன் புகாரில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு நடிகை ராணி தன் புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில் நடிகை ராணி தன் மீது பொய்யான புகார் கொடுத்து, தன் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தி விட்டார் என நடிகர் சண்முகராஜன், நடிகர் சங்கத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு நடிகை ராணிக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் நடிகை ராணி தன் சார்பாக இதுவரை எந்த விளக்கமும் தரவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து நடிகர் சண்முகராஜனுக்கு, நடிகர் சங்கம் சார்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் உள்ள விவரம்:
நடிகை ராணியின் பாலியல் புகார் குறித்து, 09.12.2018 நடந்த செயற்க்குழுவில் தாங்கள் நேரில் வந்து விளக்கம் அளித்தீர்கள். தங்கள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் பாலியல் புகார் கொடுக்கப்பட்டது என்பதை தாங்கள் அளித்த விளக்கம் மூலம் தெரிந்து கொண்டோம். தாங்கள் திரைத்துறையிலும், நாடகத்துறையிலும், இதுவரை தனிப்பட்ட முறையில் நற்பெயர் பெற்றுள்ளதை கருத்தில் கொண்டு, இந்த அசம்பாவிதத்துக்கு நடிகர் சங்கம் வருந்துகிறது.
அதே நேரம் இனிவரும் காலத்தில், நடிகை ராணி திரைப்படத்திலோ, தொலைக்காட்சி தொடரிலோ நடிக்க வரும்போது, அவர் தங்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டால் மட்டுமே தொடர்ந்து நடிக்க அனுமதி வழங்கப்படும் என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு சண்முகராஜனுக்கு நடிகர் சங்கம் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இது, நடிகை ராணிக்கு பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது.
நடிகர் சங்க உத்தரவுப்படி, சண்முகராஜனிடம் பகிரங்க மன்னிப்பை ராணி கேட்கவில்லை என்றால் பெரிய திரை, சின்னத்திரை நடிப்பை ராணி தொடர முடியாது என்ற முட்டுக்கட்டை விழுந்து விட்டது குறிப்பிடத்தக்கது.