காதல் மனைவியை மீட்டு தரக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, வாலிபர் ஒருவர் தன் தாயுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அஸ்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரதாப். தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவரும், அரூர் ஊத்தங்கரை சாம்பல்பட்டி பகுதியைச் சேர்ந்த வினுப்ரியா என்பவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருச்செங்கோடு முனியப்பன் கோவிலில் இருவரும் திருமணம் செய்துள்ளனர். இதையடுத்து சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள பிரதாப் வீட்டியில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 7ம் தேதி வினுபிரியா குடும்பத்தினர் 20க்கும் மேற்பட்டோருடன், பிரதாப் வீட்டுக்குள் நுழைந்து பிரதாப் மற்றும் அவர் தாயாரை தாக்கி விட்டு வினுபிரியாவை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரதாப் சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பிரதாப் மற்றும் அவர் தாயார் மாலதி ஆகிய இருவரும் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர்.
அப்போது ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஓடி வந்து அவர்களை தடுத்து டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் மனைவியை மீட்டுதரக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வாலிபர் தாயுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.