சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் பெண் ஒருவரை காதல் வலையில் விழ வைத்து அவரிடம் இருந்து சுமார் 180,000 பிராங்குகளை நபர் ஒருவர் ஏமாற்றியுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சூரிச் மண்டலத்தில் இந்த ஆண்டு துவக்கத்தில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. இணையத்தில் அறிமுகமான நபருடன் 53 வயதான சுவிஸ் பெண்மணி நெருக்கமாக பழகியுள்ளார்.
இருவரது நட்பு காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது. இருவரும் திருமணம் செய்துகொள்ளும் முடிவுக்கும் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த காலகட்டத்தில் குறித்த பெண்மணியிடம் இருந்து அந்த நபர் தமது தேவைக்கு தொடர்ந்து பணம் பெற்று வந்துள்ளார்.
இதுவரை சுமார் 180,000 பிராங்குகள் வரை குறித்த பெண்மணியிடம் இருந்து அவர் கைப்பற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.
டேட்டிங் இணையதளம் வாயிலாக அறிமுகமான அந்த நபராலையே இந்த கொள்ளை சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
தற்போது அந்த நபர் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என்ற நிலையில் குறித்த பெண்மணி பொலிசாரின் உதவியை நாடியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிந்துள்ள சூரிச் மண்டல பொலிசார், பொதுமக்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.