ரஷ்யாவில் பலாத்காரம் செய்ய முயன்ற நபரை கத்தியால் தாக்கிய இளம்பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் குடியிருக்கும் 19 வயது இளம்பெண் Darya Ageniy என்பவர் கடற்கரை சுற்றுலா தலம் ஒன்றில் விடுமுறை நாட்களை செலவிட சென்றுள்ளார்.
இந்த நிலையில் இவரை மர்ம நபர் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளதை இவர் உணர்ந்துள்ளார். சம்பவத்தன்று அந்த மர்ம நபர் திடிர்ரென்று இவரை அணுகி பலாத்காரத்திற்கு முயன்றுள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து தப்பித்துக்கொள்ள தம்மிடம் இருந்த கூர்மையான பொருளால் அவரது அடிவயிற்றில் கிழித்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
காயமடைந்த அந்த நபரும் அங்கிருந்து மாயமானதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் ரஷ்ய ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பொலிசார் 1,000 மைல்கள் பயணம் செய்து கொலை முயற்சி தொடர்பில் குறித்த இளம்பெண்ணை கைது செய்துள்ளனர்.
ஆனால் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக அவர் அளித்த புகாரை ஏற்றுக்கொள்ளவும் மறுத்துள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணையின்போது, பலாத்காரம் செய்ய முயன்ற நபர், தாம் அந்த இளம்பெண்ணின் கவிதை ஒன்றை வாசித்துக்கொண்டிருந்ததாகவும், அப்போது அப்பெண் திடீரென்று தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதை மறுத்த இளம்பெண் தர்யா, சம்பவத்தின்போது கத்தியை காட்டி மிரட்டிய அந்த நபர் தமது உடைகளை கழட்டியதாகவும், நிர்வாணப்படுத்தி துஸ்பிரயோகம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தம்மை தற்காத்துக்கொள்ள கூரான பொருளால் தாக்கியுள்ளார் என்பதை கொலை முயற்சி என பதிவு செய்யப்பட்டது தவறான குற்றச்சாட்டு எனவும் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.
இருப்பினும் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் குறித்த இளம்பெண்னுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.