மது பாட்டிலால் கையை கிழித்த கைதி!

கோவில்பட்டி அருகே பசுவந்தனையை அடுத்த ஆலிபச்சேரியைச் சேர்ந்த அய்யாச்சாமி மகன் சதீஷ்குமார்(28). இவர் கடந்த மாதம் 29ம் தேதி பசுவந்தனை அருகே உள்ள தனியார் காற்றாலைக்கு சென்று தகராறில் ஈடுபட்டதாக, அந்த நிறுவனத்தின் மேலாளர் ஸ்ரீராம், பசுவந்தனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின்பேரில், விசாரணை நடத்தி வந்த காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் இன்று ஆலிபச்சேரியில் சதீஷ்குமாரை கைது செய்தனர். பின்னர், அவரை கோவில்பட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2ல் ஆஜர்ப்படுத்த கொண்டு வந்தனர். அப்போது தனக்கு சிறுநீர் வருவதாக கூறி அருகேயுள்ள கழிவறை சென்ற சதீஷ்குமார், அங்கு கிடந்த காலி மது பாட்டிலால் கையை வெட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த நீதிமன்ற வளாகத்தில் இருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தி, நீதிபதி தாவூத்தம்மாள் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். தன்னை காவல்துறையினர் தனியார் காற்றாலைக்கு ஆதரவதாக துன்புறுத்துவதாக கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி உடனடியாக அவருக்கு சிகிச்சை வழங்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். ஆனால் சதீஷ்குமார் சிகிச்சை பெற மறுத்து காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சதீஷ்குமாரை வலுக்கட்டாயமாக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் சதீஷ்குமாரை மீண்டும் நீதிபதி தாவூத்தம்மமாள் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் பாளையங்கோட்டை மத்திய சிறையில் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் தற்கொலைக்கு முயன்றதாக சதீஷ்குமார் மீது கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.