மூல நோய்க்கு முரட்டு வைத்தியம்..

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே மூல நோய்க்கு மருந்தாக மூலிகை சாற்றை ஊசி மூலம் செலுத்தியதால் பெண் உயிரிழந்தார். ஊசி போட்ட நாட்டு வைத்தியரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலை பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி வேலுமணி. இவருடைய மனைவி காளீஸ்வரி.

இவர் பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், சமீப காலமாக மூல நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

ஆங்கில வைத்தியம் பார்த்து வந்த அவர்கள், நாட்டு வைத்திய முயற்சித்து பார்க்கலாம் என்று பரம்பரையாக நாட்டு வைத்தியம் பார்த்து வரும் கீழக்கலங்கல் பகுதியைச் சேர்ந்த அழகுதுரை என்பவரிடம் அழைத்துச்செல்ல திட்டமிட்டனர்.

பிறகு வைத்தியரை வீட்டுக்கே அழைத்து வந்து வைத்தியம் பார்க்க வைத்துள்ளனர். அப்போது சில மூலிகைகளை வீட்டில் வைத்து அரைத்துள்ளார் அழகுதுரை.

மூலிகை சாற்றை பிழிந்து எடுத்து அதனை ஊசி மூலம் காளீஸ்வரிக்கு போட்டதாக கூறப்படுகிறது. ஊசி போட்ட சிறிது நேரத்தில் காளீஸ்வரி மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த உறவினர்கள் காலீஸ்வரியின் உடல் நிலை மோசமானதால் அவரை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு காளீஸ்வரியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனை கேள்விப்பட்ட நாட்டு வைத்தியர் அழகுதுரை சம்பவம் நடந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து காவல்துறையினரிடத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வைத்தியர் அழகுதுரை தப்பியோடி விட்டநிலையில் அவரை தேடி பிடிக்கும் முயற்சியை காவல்துறையினர் துரிதப்படுத்தியுள்ளனர்.