ஈரோடு மாவட்டம், சுந்தரபாளையத்தைச் சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 23). பொறியியல் பட்டதாரி. இவர் நசியனுாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இதே நிறுவனத்தில் பணி புரிந்து வரும் பூர்ணிமா (வயது 21) என்பவருக்கும், சிவனாந்தத்திற்கும் காதல் மலர்ந்தது.
இவர்கள் திருமணம் செய்ய முடிவெடுத்த போது, துவக்கத்தில் இவர்களது பெற்றோர் இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், நாளடைவில், அவர்கள் சமாதானம் அடைந்தனர்.
அதனால், இவர்களது திருமணம் நிச்சயம் ஆனது. பவானி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பச்சையம்மன் கோவிலில், உறவினர்களின் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது.
இதனை அடுத்து, திருமணத்தை பதிவு செய்வதற்காக, புது மணத் தம்பதிகள் காரில் சென்று கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில், சுமார் 20 பேர் கொண்ட கும்பல், இந்த தம்பதியர் சென்ற காரை வழி மறித்தது.
என்னவென்று அறிய வெளியே வந்த மணமகன் சிவானந்தத்தை, அந்தக் கும்பல் உடனடியாகக் கடத்தி, தாங்கள் வந்த காரில் கொண்டு சென்றனர்.
இதைக் கண்ட மணமகள் அதி்ர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக, பூர்ணிமா பவானி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தான் பணி புரியும் நிறுவனத்தில் உள்ளவர்கள் தான் அவரது கணவரைக் கடத்தியதாக புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் அடிப்படையில், சிவானந்தத்தைக் கடத்திய கும்பலைத் தேடி வருகின்றனர்.