கமல் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். இப்படத்தை சங்கர் இயக்கி இருந்தார். இப்படத்தில் ஊழலை ஒழிப்பது, அரசு அலுவலகங்களில் நடக்கும் லஞ்சம் போன்ற முறைகேடுகளை பற்றி தெளிவாக கூறியிருந்தார். கமல் இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடித்திருந்தார். அப்போது இந்த படம் மூன்று தேசிய விருதுகள் பெற்றது. அந்த படத்தில் நடித்த கமல் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், 2.0 படத்தை தொடர்ந்து அடுத்து ஷங்கர் இந்தியன் 2 படத்தை எடுக்க உள்ளார். கமல் நடிப்பில் 22 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் உருவாகிறது. ‘இந்தியன் 2’ படத்தில் கமலுடன் ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தது. தற்போது இந்த படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இப்படத்தின் செட் அமைப்பதற்கான வேலைகள் கடந்த மாதமே தொடங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. படப்பிடிப்பு வரும் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இப்படம் 2020ஆம் ஆண்டுதான் வெளியிடப்படும் லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனிடையே, இந்தியன் 2 படத்துக்கு போடப்பட்ட பிரமாண்ட செட்டுக்கு எவ்வளவு செலவு செய்துள்ளார்கள் என்ற செய்தியே அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது உருவாக்கி வரும் செட்டு, படத்தில் இரண்டு நிமிட காட்சிகள் மட்டுமே வரவுள்ளதாம். அந்த இரண்டு நிமிட காட்சி செட்டு மட்டும், .ரூ.2 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாக்கி வருகின்றனர். மேலும், இந்த படத்தின் மிக முக்கிய காட்சி என்பதால் அந்த காட்சியில் இருந்து படத்தை தொடங்க முடிவு எடுத்து இருக்கிறார்கள் என்று தகவல் வந்துள்ளது.