லண்டனில் வசிக்கும் இந்திய பெண் தனக்கு புற்றுநோய் இருப்பதாக கணவரையும், குடும்பத்தாரையும் ஏமாற்றி வந்த நிலையில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜாஸ்மின் மிஸ்டரி (36) என்ற பெண் இந்தியாவின் டேட்டிங் வலைதளம் மூலம் கடந்த 2012-ல் சக இந்தியர் விஜய் கடீசியா (40) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பிறகு இருவரும் தேனிலவு சென்ற நிலையில் அங்கு தனக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டதாக கணவர் விஜய்யிடம் ஜாஸ்மின் கூறியுள்ளார்.
பின்னர் மருத்துவரிடம் ஜாஸ்மின் சென்றுள்ளார். இதையடுத்து தனக்கு மூளை புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியதாக விஜய்யிடம், ஜாஸ்மின் பொய் கூறினார்.
இதையடுத்து தனது கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் தனக்கு சிகிச்சையளிக்க பணம் வேண்டும் என அடிக்கடி வாங்கி வந்துள்ளார்.
இதோடு உறவினர்கள் இல்லாத சிலரும் ஜாஸ்மினுக்கு பணயுதவி செய்துள்ளனர்.
இப்படி உறவினர்கள் இல்லாதோரிடம் பணம் வாங்கிய ஜாஸ்மின் தான் இறந்துவிட்டதாக அவர்களை பின்னர் நம்ப வைத்துள்ளார்.
இப்படி £250,000 வரை பணத்தை ஏமாற்றி ஜாஸ்வின் வாங்கினார்.
எல்லோரிடமும் வாங்கிய பணத்தை வைத்து விலையுயர்ந்த ஹேண்ட் பேக்குகளை வாங்குவது போன்ற சொகுசான விடயங்களுக்கு செலவிட்டுள்ளார் ஜாஸ்மின்.
இப்படி 4 ஆண்டுகளாக அவர் எல்லோரையும் ஏமாற்றி வந்த நிலையில் ஜாஸ்மின் கணவர் விஜய், மனைவியின் ஸ்கேன் ரிப்போட்களை மருத்துவரான தனது நண்பரிடம் காட்டியுள்ளார்.
அப்போது அந்த ஸ்கேன் கூகுளில் இருந்து எடுக்கப்பட்டது தெரியவந்த நிலையில் விஜய் அதிர்ந்து போனார்.
பின்னர் ஜாஸ்மின் காட்டிய எல்லா மருத்துவ ஆவணங்களும் போலி என கடந்த நவம்பர் மாதம் தெரியவந்தது.
இதையடுத்து ஜாஸ்மின் மீது விஜய்யும், குடும்பத்தாரும் பொலிஸ் புகார் கொடுத்தனர்.
இதன்பின்னர் பொலிசார் ஜாஸ்மினை கைது செய்த நிலையில் அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
தற்போது ஜாஸ்மின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
இது ஒரு பயங்கரமான குற்றம், எல்லோரிடமும் புற்றுநோய் இருப்பதாக பொய் சொன்னதை மன்னிக்கவே முடியாது என நீதிபதி ஜாஸ்மினுக்கு கண்டனம் தெரிவித்தார்.