திருமணம் முடிந்த 1 மணி நேரத்தில் மனைவி கண்முன் நடந்த அதிர்ச்சி சம்பவம்

தமிழகத்தில் திருமணம் முடிந்து ஒரு மணி நேரத்தில் காதல் கணவனை மர்ம கும்பல் ஒன்று கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணமகளை தள்ளிவிட்டு உறவினர்கள் முன்னிலையில் பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் நசியனூர் பகுதியை சேர்ந்தவர் 23 வயதான சிவானந்தம். பொறியியல் படித்துள்ள இவர் நசியனூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இவர் வேலை செய்த அதே நிறுவனத்தில் பூர்ணிமா (21) என்பவர் வேலை செய்து வந்தார். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனால், இருவரும் திருமணம் செய்து கொள்வதாக முடிவு எடுத்து பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.

அவர்கள், ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தாலும் நாளடைவில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பவானியில் உள்ள கோவில் ஒன்றில் வைத்து சிவானந்தனுக்கும், பூர்ணிமாவுக்கும் திருமணம் நடைபெற்றது.

பின்னர் இருவரும் பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு பவானி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

பவானி தலைமை தபால் நிலையம் அருகே காரை வழிமறித்த 20 பேர் கொண்ட கும்பல் காரில் இருந்த மணமகன் சிவானந்தனை அடித்து, இழுத்துச் சென்று மற்றொரு காரில் கடத்திச் சென்றது. இதை தடுக்க முயன்ற பூர்ணிமாவை கீழே தள்ளி விட்டு சென்றது. இதைக் கண்ட உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பாக பூர்ணிமா பவானி பொலிசரிடம் புகார் தெரிவித்துள்ளார். தமது கணவரை மீட்டுத்தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் பவானி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.