அடுத்தடுத்து வந்த தொடர் கொலை மிரட்டல்கள்!

பிரபல தென்னிந்திய நடிகை லீனா பவுல் நடத்தி வரும் அழகு நிலைய கடையின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தென்னிந்திய நடிகையான லீனா பவுல், ஜான் ஆபிரகாமின் மெட்ராஸ் கஃபே மற்றும் மோகன்லாலின் ரெட் சில்லில்லஸ் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.

இவர் மோசடி முதலீட்டு நிறுவனத்தை நடத்துவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டார். முதலீட்டாளர்களுக்கு பத்து மடங்கு வருமானத்தை அளிப்பதாக உறுதியளித்து ஏமாற்றிவிட்டார் என மும்பை கிரைம் கிளைக்கு புகார் வந்தது.

அதனடிப்படையில் லீனா மற்றும் அவரது கூட்டாளியான சேகர் சந்திரசேகர் ஆகியோர் ஜூன் 2015 ல் பொருளாதார குற்றச் சாட்டுகளால் கைது செய்யப்பட்டனர்.

அதன்பிறகு சென்னையில் ஒரு தனியார் வங்கியில் ரூ. 19 கோடி மோசடி செய்ததாக லீனா மீது குற்றம் சாட்டப்பட்டது.

அதன்பேரில் 2013 ஆம் ஆண்டில் தில்லி மற்றும் சென்னை பொலிஸாரால் நடத்தப்பட்ட ஒரு கூட்டு நடவடிக்கையில் லீனா மற்றும் அவரது துணை நிறுவனரான பாலாஜி கைது செய்யப்பட்டனர்.

கடந்த சில மாதங்களாகவே தனக்கு அதிகமான கொலை மிரட்டல்கள் வருவதாக லீனா புகார் தெரிவித்து வந்தார். சமீபத்தில் கூட தாதா ரவி பூஜாரியிடமிருந்து தனக்கு அச்சுறுத்தல்கள் வருவதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் லீனா நடத்தி வரும் அழகு நிலைய கடையின் முன்பு இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றார். அதில் குற்றவாளிகள் இருவரும் கடைக்குள் செல்ல முயற்சி செய்யவில்லை. அந்த சமயம் கடைக்குள் அதிகமான வாடிக்கையாளர்கள் இருந்துள்ளனர்.

ஏமாற்றப்பட்டவர்களில் யாரேனும் விடும் மிரட்டலாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.