ஐக்கிய தேசியக் கட்சியின், மாநாடு நாளை காலி முகத்திடலில்..

ஐக்கிய தேசியக் கட்சியின், மாநாடு நாளை கொழும்பு-காலி முகத்திடலில் இடம்பெறவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா தெரிவித்துள்ளார்.

அத்தோடு குறித்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஓக்டோபர் 26 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியின் வெற்றிக்கொண்டாட்டமாக இந்த மாநாடு அமையவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு “ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் எம்முடன் ஒத்துழைக்காமல் இருந்திருந்தால், நிச்சயமாக இந்த வெற்றியை எம்மால் பெற்றுக்கொண்டிருக்க முடியாது.

அரசமைப்புக்கு மற்றும் ஜனநாயகத்துக்கு எதிராகவே ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து, ஒக்டோபர் 26 ஆம் திகதி பிரதமர் பதவி பறிக்கப்பட்டது.

இதற்கெதிராக நாம் தொடர்ந்தும் பல்வேறு முறைகளில் போராட்டங்களை மேற்கொண்டிருந்தோம். இறுதியில், இந்த சூழ்ச்சியில் நாம் வெற்றியும் பெற்றுக்கொண்டுள்ளோம்.

எனவே, 17 ஆம் திகதி 1 மணிக்கு நடைபெறும் இந்த மாநாடு, இந்த அரசியல் சூழ்ச்சியைத் தோற்கடித்த வெற்றி மாநாடாக இடம்பெறவுள்ளது.

இதில், ஆதரவாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் நாம் அழைப்பு விடுக்கிறோம்“ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.