கல்வியறிவில் முன்னில்லையில் இருக்கும் இந்தியாவின் கேரள மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகம் நடப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கேரளாவில் ஆண்டுதோறும் பாலியல் கொடுமை குறித்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் மட்டும் கேரளா முழுவதும் 589 குழந்தைகள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகியுள்ளன.
கடந்த 10 வருடங்களாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகிறது.
கேரள மாநில காவல்துறையின் புள்ளிவிவரப்படி, கடந்த 10 வருடங்களில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 600 சதவிகிதம் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.
அதில் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை 500 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
கடந்த 2008 ஆம் வருடம் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைக்காக 215 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அதுவே 2017 ஆம் வருடத்தில் ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்படும் அளவுக்கு அதிகரித்திருக்கிறது.
குற்ற ஆவணக்காப்பக புள்ளிவிவரங்களின்படி, கேரளா முழுவதும் நடந்த சாதாரணக் குற்றங்கள் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை சில வருடங்களில் குறைந்திருக்கிறன.
ஆனால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடூரம் தொடர்பான வழக்குகள் மட்டும் எந்த வருடத்திலும் குறையாததுடன், ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
கடந்த 2013-ம் வருடம் கேரளாவில் இந்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது 1,016 வழக்குகள் இந்தச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டன.
அதுவே 2015-ம் ஆண்டு 1,589 வழக்குகளாக அதிகரித்தது. தொடர்ந்து குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரித்ததால் 2008-ம் ஆண்டு 549 என்ற எண்ணிக்கையில் இருந்த குற்றச்செயல்கள் 600 சதவிகிதம் உயர்ந்து கடந்த ஆண்டில் (2017) 3,478 என அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.