இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இரண்டவாது போட்டி தற்போது பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெரும் நிலையில் உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் இந்திய அணிக்கு சாதகமாக எல்லாமும் அமைந்து விட தொடக்க வீரர்களான ராகுல், விஜயின் ஆட்டம் தான் மோசமாக உள்ளது. இந்த தொடருக்கு புதிய தொடக்க ஆட்டக்காரராக அழைத்து வரப்பட்ட பிரித்வி ஷா பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய போது அரைசதம் விளாசிய அவர் பீல்டிங் செய்யும்போது தவறி கீழே விழுந்தார் அதில் கணுக்காலில் காயம் அடைந்து ஒய்வு எடுத்தார். இதனால் அடிலெய்டு மற்றும் பெர்த் டெஸ்டில் இடம்பெறவில்லை. வரும் 26-ந்தேதி தொடங்கும் ‘பாக்சிங் டே’ மெல்போர்ன் டெஸ்டில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தொடரிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான எஞ்சிய தொடரில் விளையாடுவதற்கு ப்ரித்வி ஷாவிற்கு பதிலாக மயாங்க் அகர்வால் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இவர் விரைவில் இந்திய அணியுடன் இணைவார். அதேபோல அணியில் ஆல் ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா இடம்பெற்றுள்ளார்.
மூன்றாவது மற்றும் நான்காவது போட்டிக்கான இந்திய அணியில் விராட் கோலி, முரளி விஜய், கே.எல்.ராகுல், புஜாரா, ரஹானே, விஹாரி, ரோகித் சர்மா, ரிசாப் பாண்ட், பார்த்திவ் படேல், அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், மொகமது ஷமி, இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ், பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்ட்யா, மாயங் அகர்வால் உள்ளிட்டோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.