திண்டுக்கல் மாவட்டத்தில் அடியனூத்து ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது.
170 குடியிருப்புகளில் 1700 பேர் வசிக்கின்றனர். ஒரு ஆழ்துளை கிணறு அமைத்துக்கொடுத்து 9 இடங்களில் சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி வைத்து கொடுத்திருந்தனர்.
அடியனூத்து ஊராட்சி சார்பாக ஆழ்துளை கிணற்றிலிருந்து வழங்கப்பட்ட குடிதண்ணீர் கடந்த 9மாத காலமாக வழங்கப்படாததால் அவர்கள் 3 குடம் குடிதண்ணீர் ரூ.10க்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய அவல நிலையில் உள்ளனர்.
6கி.மீ தூரம் உள்ள ரெட்டியபட்டியிலிருந்து இருசக்கர வாகனம் மூலம் குடிதண்ணீரை எடுத்து வருகின்றனர்.
தண்ணீர் வசதி இல்லாததால் கழிப்பறைகள் செயல்பாடின்றி உள்ளது. இதனால் இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் 1700 பேரும் சுற்றியுள்ள பகுதியை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்த வேண்டிய அவல நிலையில் உள்ளனர்.
இதனால் அவர்களுக்கு தொற்றுநோய் ஏற்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
முகாமை சுற்றி குப்பை கூளங்கள் இருப்பதால் நோய் தொற்றுக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
செல்வநாயகி இலங்கை அகதி கூறுகையில், 1990ம் ஆண்டு கண்ணீருடன் இந்தியா வந்தோம் எங்களுக்கு திண்டுக்கல்லில் தங்க இடம் கொடுத்தார்கள். ஆனால் இன்றுவரை குடிதண்ணீருக்காக கண்ணீர் விட்டுதான் வருகிறோம் எங்களை யாரும் கண்டுகொள்வதில்லை.
சமூக ஆர்வளர்கள், தொண்டுநிறுவனங்கள் எங்கள் முகாமில் வசிக்கும் 1700 பேரின் நலன் கருதி புதிய ஆழ்துளை கிணறு அமைத்துக்கொடுத்தால் எங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.